
உடல்நலக்குறைவு காரணமாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி(87) உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார்.
1934ம் ஆண்டு பிறந்த ராமமூர்த்தி 1967ம் ஆண்டு முதல் 1978ம் ஆண்டு வரை தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராக இருந்துள்ளார்.
மேலும் 1967ம் ஆண்டு முதல் 1971ம் ஆண்டு வரை சட்டசபை உறுப்பினராகவும், 1976ம் ஆண்டு முதல் 1984ம் ஆண்டு வரை சட்டமேலவை உறுப்பினராகவும், 1981ம் ஆண்டு முதல் 1984ம் ஆண்டு வரை சட்டமேலவையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார்.
பின்னர் 1984ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டு வரை இந்திய நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையில் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.
இதனைத்தொடந்ர்து 2011 சட்டசபைத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தனிக் கட்சி ஆரம்பித்தார். இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார். ஆனால் சில மாதத்தி்ல் தனது தனிக் கட்சியை கலைத்துவிட்டு சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
அதன்பிறகு அவருக்கு தமிழக பிரிவின் தலைவர் பதவியைத் சரத் பவார் வழங்கினார். அடுத்த சில மாதங்களிலேயே ராமமூர்த்தி தலைமையிலான கமிட்டியே கலைக்கப்பட்டு விட்டதாக அந்த கட்சியின் அகில இந்திய கமிட்டி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 87 வயதான அவர் உடல்நலக் குறைவால் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள வீட்டில் காலமானார். இதனைத்தொடர்ந்து அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திண்டிவனம் ராமமூர்த்தி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.