ஈரோடு இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி- வேட்பாளரை அறிவித்தார் பிரேமலதா

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா கூறியதாவது, ஈரோடு இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட உள்ளது. ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்தன் வேட்பாளராக களமிறங்குகிறார். உண்மையான உழைப்பு, வாக்குறுதிகளை வழங்கி நேர்மையான முறையில் தேர்தலை சந்திப்போம். தேமுதிக வேட்பாளர் எப்போது வேட்புமனு தாக்கல் செய்வார் என்பது பின்னர் அறிவிக்கப்படும்.

ஒட்டுமொத்த கழகத்தின் ஒப்புதலுடன் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு கழக வேட்பாளரின் வெற்றிக்காக உழைப்போம், தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் செய்வாரா? என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். தற்போதைய சூழ்நிலையில் தேமுதிக எந்த கூட்டணியிலும் இல்லை, ஈரோடு கிழக்கு தொகுதி ஏற்கனவே 2021ல் எங்கள் கட்சி வென்ற தொகுதி. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவுக்கு இன்றைய கூட்டத்தில் இரங்கல் தெரிவித்துள்ளோம். மனிதாபிமான அடிப்படையில் குறைந்தது 3 மாதம் கழித்து இடைத்தேர்தல் கொண்டு வந்திருக்கலாம். இப்போது தேர்தலை அறிவித்துவிட்டார்கள். அறிவித்தது அறிவித்ததுதான். எனவே, அரசியலில் இதையெல்லாம் சந்தித்துதான் ஆகவேண்டும். எனவே, தேமுதிக தனியாக களம்காண்கிறது இவ்வாறு அவர் கூறினார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

80 − 71 =