
ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் விமானத்தளம் மீது, ஈராக்கை சேர்ந்த இஸ்லாமிக் ரெசிஸ்டன்ஸ் என்ற பயங்கரவாத அமைப்பினர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
ஈராக்கின் மேற்கு மாகாணத்தில் அமைந்துள்ள ஐன் அல்-அசாத் என்னும் இடத்தில், அமெரிக்க ராணுவத்தின் விமானத்தளம் ஒன்று அமைந்துள்ளது. சதாம் உசேன் காலத்தில் ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்கப் படைகள் அதன் பின்னர் அங்கிருந்து விலகிய பிறகும் ஒரு சில தளங்களை அமெரிக்க துருப்புகள் இன்னமும் ஆக்கிரமித்துள்ளன. அவற்றில் ஒன்று அஜ்ன் அல் அசாத் விமானத்தளம்.
இந்த விமானத்தளம் மீது ட்ரோன்கள் மூலம் திடீர் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. ஈராக்கில் உள்ள இஸ்லாமிக் ரெசிஸ்டன்ஸ் என்ற அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்றது. சிறிய இடைவெளிகளில் அமெரிக்க தளத்தை குறிவைத்து ட்ரோன்களை தொடர்ந்து ஏவியது. அல்-அசாத் விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்திய விவரங்களை பயங்கரவாத அமைப்பு பின்னர் வெளியிட்டது.
”எங்களது ட்ரோன்கள் அமெரிக்க விமானப்படை தளத்தின் இலக்குகளை துல்லியமாக தாக்கின. இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கும் அமெரிக்காவுக்கு எதிராக இந்த தாக்குதலை நடத்தி உள்ளோம். அமெரிக்காவுக்கு எதிரான எங்களது தாக்குதல் தொடரும்” என இஸ்லாமிக் ரெசிஸ்டன்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. ஈராக்கின் அமெரிக்க தளம் தாக்கப்பட்டது மற்றும் வளாகத்தின் சேதங்கள் குறித்து அமெரிக்கா உடனடியாக எதுவும் தெரிவிக்கவில்லை.
முன்னதாக, இஸ்ரேலுக்கு ஆதரவாக மத்திய கிழக்கில் நிலை நிறுத்தப்பட்டிருக்கும் அமெரிக்காவின் விமானந்தாங்கி போர்க்கப்பல் மீதும் இஸ்லாமிய ஆயுதக் குழுக்கள் தாக்குதல் தொடுத்தன. மத்திய சிரியாவில் இருந்து ட்ரோன்கள் மூலம் தொடுக்கப்பட்ட தாக்குதலை அமெரிக்க எதிர்கொண்டு அழித்தது. பின்னர் விமானப்படைகளை ஏவி சிரியாவில் இருக்கும் ஈரான் ஆதரவு ஆயுதக்குழுக்களின் நிலைகள் மீது அண்மையில் குண்டுகளை வீசி நிர்மூலம் செய்தது.