இஸ்ரேல் – ஹமாஸ் போர் : சீனாவில் இஸ்ரேல் தூதரக அதிகாரிக்கு கத்திக் குத்து

இஸ்ரேல் – ஹமாஸ் போர் முற்றிவரும் சூழலில், சீனாவில் உள்ள இஸ்ரேல் நாட்டு தூதரக அதிகாரி ஒருவர் மர்ம நபரால் தாக்கப்பட்டார்.

கத்திக்குத்துக்கு உள்ளான அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான அதிகாரியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேவேளையில் உலகம் முழுவதும் உள்ள இஸ்ரேலிய மக்கள், யூதர்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது.

தங்களை நோக்கி ஹமாஸ் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு 7-வது நாளாக பதிலடி கொடுத்து வருகிறது இஸ்ரேல் பேரழிவின் பிடியில் காசா இருக்கிறது. இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 1500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இவர்களில் 500 பேர் குழந்தைகள் என காசா சுகாதார அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இஸ்ரேல் தரப்பில் இதுவரை 1200 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில்தான் சீனாவில் இஸ்ரேல் தூதரக அதிகாரி தாக்கப்பட்ட சம்பவம் பற்றிய செய்தி வெளியாகியுள்ளது. இந்தத் தாக்குதல் இஸ்ரேல் தூதரக வளாகத்தில் நடைபெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் இஸ்ரேல் தூதரகம் அமைந்துள்ள பகுதியில் பல உலக நாடுகளின் தூதரகங்களும் அமைந்துள்ளதால் அது உச்ச பாதுகாப்பு பகுதியாகத் திகழ்கிறது. இந்தத் தாக்குதலின் பின்னணி குறித்து ஆய்வு செய்வதாக இஸ்ரேல் தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

முன்னதாக இஸ்ரேல் – ஹமாஸ் போர் இன்னும் தீவிரமடையலாம் என்பதால் கவலை கொள்வதாக சீனா தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது. இத்தகைய சூழலில் சீனாவில் இஸ்ரேல் தூதரக அதிகாரி தாக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல், காசா என இரு தரப்பிலும் சேர்த்து 2800-க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியான சூழலில், காசாவின் வடக்குப் பகுதியில் இருந்து 11 லட்சம் மக்களை வெளியேற்றும்படி ஐ.நா. மூலம் ஹமாஸ் குழுவுக்கு இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது. 24 மணி நேரத்தில் 11 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்படாவிட்டால் தரைவழித் தாக்குதலில் மோசமாக பேரழிவை சந்திக்க வேண்டியிருக்கும் என இஸ்ரேல் எச்சரித்தது. ஆனால், ஹமாஸ் குழு இந்த எச்சரிக்கையை நிராகரித்துள்ளது, காசாவில் இருந்து மக்கள் வெளியேற மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளது. காசாவின் தெற்கு மற்றும் மத்தியப் பகுதிகள் தற்போது கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.