இஸ்ரேல் – ஹமாஸ் போர் எதிரொலி: பாதுகாப்பு அமைப்புகள் எச்சரிக்கையைத் தொடர்ந்து டெல்லியில் உஷார் நிலை

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், உள்நாட்டில் சமூக விரோத நடவடிக்கைகள் குறித்து மத்திய பாதுகாப்பு அமைப்புகளிடமிருந்து எச்சரிக்கை வந்ததைத் தொடர்ந்து டெல்லியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தகவல்களின் படி, வெள்ளிக்கிழமை தொழுகைகளின் போது அசம்பாவிதம் நடக்காமல் விழிப்புடன் இருப்பதற்காக டெல்லி வீதிகளில் பாதுகாப்புக்காக போலீஸார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல், இஸ்ரேல் தூதரகம், யூத மத கட்டிடங்கள் உள்ளிட்ட முக்கியமான இடங்களிலும் பாதுகாப்பு பல மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலியர்கள் வசிக்கும் பகுதிகளில் பாதுகாப்பினை பலப்படுத்துமாறு பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பகுதிகளுக்கும் பாதுகாப்பு முகமைகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலில் வன்முறை அதிகரித்ததைத் தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற பிறநாடுகளில் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்ற சாத்தியமான யூத இலக்குகள் மற்றும் பாலஸ்தீன சார்பு எதிர்ப்பாளர்களின் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, பொது நலன்கருதி பாலஸ்தீனத்துக்கு ஆதரவான அனைத்து ஆர்ப்பாட்டத்துக்கும் பிரான்ஸ் அரசு தடைவிதித்தது. இந்தத் தடை பேச்சு சுதந்திரம் மற்றும் ஒன்று கூடும் உரிமைக்கு எதிரானது என்று விமர்சனம் எழுந்துள்ளது.