இஸ்ரேலில் இருந்து இந்தியா திரும்பிய 21 தமிழர்களில் 14 பேர் சென்னை வருகை :அமைச்சர், உறவினர்கள் நெகிழ்ச்சியுடன் வரவேற்றனர்

இஸ்ரேலில் இருந்து இந்தியா திரும்பிய 21 தமிழர்களில் 14 பேர் சென்னைக்கு விமானத்தில் வந்தனர்.

இஸ்ரேல் படை மற்றும் பாலஸ்தீனம் ஹமாஸ் அமைப்பினர் இடையே நடந்து வரும் சண்டை இன்று 7-வது நாளாக நீடிக்கிறது. இந்த போர் காரணமாக தாயகம் திரும்ப இந்தியர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ள இந்தியர்களை ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் மத்திய அரசு டெல்லி அழைத்து வருகிறது. அதன்படி, ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு முதல் மீட்பு விமானம் இன்று காலை டெல்லி வந்தது.

தாயகம் திரும்பிய 212 இந்தியர்களில் 21 பேர் தமிழர்கள். இந்நிலையில், இஸ்ரேலில் இருந்து இந்தியா திரும்பிய 21 தமிழர்களில் 14 பேர் சென்னை வருகை தந்தனர். மாணவர்கள் 12 பேர், மாணவிகள் 2 பேர் என 14 பேர் சென்னை வந்துள்ளனர். டெல்லியில் இருந்து சென்னை வந்த 14 பேரை விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், திமுக எம்.பி கலாநிதி வீராசாமி மற்றும் அதிகாரிகள் நெகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

மேலும் அங்கு திரண்டு இருந்த உறவினர்களும் கண்ணீர் மல்க அவர்களை கட்டித்தழுவி வரவேற்றனர். 21 தமிழர்களில் எஞ்சிய 7 பேர் டெல்லியில் இருந்து நேராக கோவை சென்றனர். இதுகுறித்து விமான நிலையத்தில் பேட்டியளித்த மாணவர் ஒருவர், இஸ்ரேல் எல்லைப்பகுதிகளின் நிலைமை பயங்கரமாக உள்ளது. சைரன் சத்தம் இன்னும் என் காதுகளுக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இஸ்ரேலின் அயர்ன் டோம் பாதுகாப்பு கவசத்தால் உயிர் பிழைத்தோம் என தெரிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், இஸ்ரேலில் இருந்து இந்தியா திரும்பிய 21 தமிழர்களில் 14 பேர் சென்னை வந்தடைந்தனர். பாலத்தீன பகுதியில் தமிழர்கள் யாரும் இல்லை, இங்கிருந்து இவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல அரசு சார்பில் வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தாயகம் திரும்பிய மாணவர்களின் படிப்புக்கு முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.