இரு பகுதி மீனவர்களிடையே நடுகடலில் மோதல் ஏற்படாமல் தடுக்க காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் பூம்புகார் சந்திரபாடி திருமுல்லைவாசல் மடவாய்மேடு உள்ளிட்ட கிராமங்களில் தடை செய்யப்பட்ட சுருக்கு மடி வலை கொண்டு மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தரங்கம்பாடி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராம மீனவர்கள் வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி கோரி மீனவர்கள் கடந்த மாதம் ரேஷன் கார்டு ஒப்படைக்கும் போராட்டம் உள்ளிட்டவற்றை மேற்கொண்டனர்.

இரண்டு தரப்பும் மாறி மாறி போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில் தடையை மீறி தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். இந்நிலையில் தடையை மீறி பூம்புகார், சந்திரபாடி ஆகிய கிராம மீனவர்கள் 36 விசைப்படகு மூலம் சுருக்குமடி வலையுடன்  கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.

இதனை அடுத்து அவர்களை தடுக்கும் விதமாக தரங்கம்பாடி, சின்னங்குடி புதுப்பேட்டை மாணிக்கபங்கு சின்னமேடு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் கடலுக்குள் சென்றனர். இதனால் நடுக்கடலில் 2 மீனவர் தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகுணா சிங் தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு மீனவ பஞ்சாயத்து தலைவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். மோதலைத் தவிர்க்க தரங்கம்பாடி மற்றும் சந்திர பாடி பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. கடற்கரையில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் கையில் தடி கழிகளோடு நிற்பதால் பதட்டம் மேலும் அதிகரித்துள்ளது.