ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று தமிழகம் வருவுள்ள நிலையில், சென்னை 7000 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சட்டசபை அரங்கில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்பட திறப்புவிழா இன்று மாலை 5 மணியளவில் நடக்கிறது. கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்கிறார்.
இந்நிலையில் இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி, டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதியம் 1 மணிக்கு சென்னை வரும் அவர், கிண்டி கவர்னர் மாளிகையில் ஓய்வு எடுத்தப்பின்னர், அங்கிருந்து மாலை 4.30 மணியளவில் புறப்பட்டு சாலை மார்க்கமாக சட்டசபை விழா அரங்குக்கு மாலை 5 மணிக்கு வருகை தர உள்ளார்.
இதனைத்தொடர்ந்து ஜனாதிபதி வருகையையொட்டி சென்னையில் உயர் போலீஸ் அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பில் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் விமானநிலையம், கவர்னர் மாளிகை, தலைமைச் செயலகம் ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சட்டசபையில் கருணாநிதி உருவப்படம் திறப்பு நிகழ்ச்சி முடிந்தவுடன் இன்று இரவு கிண்டி கவர்னர் மாளிகையில் தங்கிய பின்னர், நாளை மறுநாள் காலை விமானம் மூலம் கோவை புறப்பட்டு அங்கிருந்து ஊட்டி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தகக்து.