இந்த ஆட்சி இன்னும் வேண்டுமானால் 3 ஆண்டுகள் நீடிக்கும். அதன்பிறகு, திமுக என்பது மண்ணோடு மண்ணாக போய்விடும்: அண்ணாமலை 

கோவை: வன்முறை மூலமாக பாஜகவை ஆட்சியில் அமர்த்த வேண்டுமென திமுக நினைத்தால் நான் எதுவும் செய்ய முடியாது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கோவை விமான நிலையத்தில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்: ”ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் அளித்தும், ஆ.ராசா சொன்ன கருத்துக்கு தமிழக காவல்துறை இதுவரை ஒரு எஃப்ஐஆர் கூட பதிவு செய்யவில்லை. ஆனால், ஆ.ராசா கூறியதை எதிர்த்துப் பேசிய கோவை பாஜக மாநகர், மாவட்ட தலைவர், தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். கோவையில் தவறாக நடந்துகொண்ட காவல்துறை அதிகாரிகள் ஒவ்வொருவெர் மீதும் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளேன். பாஜக தொண்டர்கள் மீது கைவைத்த எந்த போலீஸாரும் தப்பிக்க முடியாது. இந்த ஆட்சி இன்னும் வேண்டுமானால் 3 ஆண்டுகள் நீடிக்கும். அதன்பிறகு, திமுக என்பது மண்ணோடு மண்ணாக போய்விடும். அதன்பிறகு, காவல்துறையினர் என்ன செய்வார்கள்?

முதல்வர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போஸ்டர் ஒட்டிய தொண்டர்களை கைது செய்துள்ளனர். நானே ஸ்டாலினை எதிர்த்து போஸ்டர் ஒட்டுகிறேன். என்னை கைது செய்யுங்கள் பார்க்கலாம். போஸ்டர் ஒட்டுவது தவறா. ஸ்டாலின் என்ன கடவுளா. மூன்று வேளையும் பூஜை செய்து, அலங்காரம் செய்து, அவருக்கு மாலையிட வேண்டுமா. கோவையில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்றால் அதற்கு காரணம் காவல்துறைதான். காவல்துறை நடுநிலையோடு செயல்பட வேண்டும். ஒருதலைபட்சமாக செயல்படக்கூடாது. எந்த ஒரு பதவியும் நிரந்தரம் அல்ல.

ஆனால், அரசியல் கட்சி இருக்கும். அதை காவல்துறையினர் புரிந்துகொள்ள வேண்டும். வன்முறை மூலமாக பாஜகவை ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும் என்று திமுகவும், அதை சார்ந்த இயக்கங்களும் திட்டமிட்டால், என்னால் எதுவும் செய்ய முடியாது. காவல்துறை மீது மிகுந்த மரியாதை உள்ளது. ஆனால், கோவை மாநகர காவல்துறை உயர் அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் நிச்சயம் ஏற்புடையது அல்ல. பெட்ரோல் குண்டு வீசிக்கொண்டே இருப்பார்கள். பார்த்துக்கொண்டே இருப்போம் என நினைத்துக் கொண்டிருக்கிறார்களா. இவ்வாறு அவர் கூறினார்.

கோவையில் தொடர் சம்பவம் – இரண்டு பேர் அதிரடி கைது

கோவை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக அடுத்தடுத்து பாஜக நிர்வாகி மற்றும் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்தது. இந்த சம்வத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- சிசிடிவி காட்சி பதிவுகளை கொண்டு ஜேசுராஜ், இலியாஸ் ஆகியோரை கைது செய்துள்ளோம். கைது செய்யப்பட்ட இருவரும் எஸ்.டி.பி.ஐ கட்சியில் பொறுப்பில் உள்ளனர். பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளோம். பல்வேறு மத அமைப்பினரும் ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர். சிசிடிவி மற்றும் நுண்ணறிவு பிரிவு விசாரணையின் அடிப்படையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். வீடு அல்லாத பொருட்கள் மீது தீவைத்து தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு வழக்குகளில் குற்றவாளிகளை நெருங்கி விட்டோம் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

52 − = 46