“இந்துத்துவ சனாதனச் சக்திகளின் முயற்சிகளை முறியடிக்க அரசியல் சாசன நாளில் உறுதி ஏற்போம்”: ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ

“நவம்பர் 26ம் நாள் அரசியல் சட்ட நாளை மறைத்து, அரசு சார்பில் கல்லூரிகளில் பாரதம், பகவத் கீதை, வேத இலக்கியம், உபநிடதங்கள், பழங்கால பஞ்சாயத்து முறைகள் குறித்து கருத்தரங்குகள் நடத்துவதற்கு பா.ஜ., அரசு யூ.ஜி.சி., மூலம் அறிவிப்பை வெளியிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது,” என்று ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்திய அரசியலமைப்புச் சட்டம், 1948 நவம்பர் 4ம் நாள் அரசியல் நிர்ணய சபையில் அரசமைப்புச் சட்ட வரைவுக்குழுத் தலைவர் அம்பேத்கரால் முன்மொழியப்பட்டு, 1949 நவம்பர் 26ம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டு, 73 ஆண்டுகள் ஆகின்றன. இடைக்கால அரசின் பிரதமராக ஜவஹர்லால் நேரு அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதற்கான குறிக்கோள் தீர்மானத்தை 1946ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி அரசியல் நிர்ணய சபையில் தாக்கல் செய்தார். அதில் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கான அடிப்படைக் கொள்கைகளும் அதற்கான நடைமுறைகளும் இடம் பெற்றிருந்தன.

அரசியல் சாசன வரைவுக் குழு அம்பேத்கர் தலைமையில் 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் நாள் அமைக்கப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் இறுதி வரைவு அறிக்கையை 1948 நவம்பர் 4ம் நாள் அரசியல் நிர்ணய சபையில் அம்பேத்கர் தாக்கல் செய்தார். இதில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு பிரிவின் மீதும் 1949 அக்டோபர் 17 வரை அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களின் விரிவான விவாதம் நடந்தது. இதில் மொத்தம் 7,653 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, இறுதி விவாதம் நவம்பர் 14ம் நாள் தொடங்கியது.

அனைத்து விவாதங்களும் நிறைவுபெற்று, அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் அனைவராலும் ஒப்புதல் அளிக்கப்பட்டு 1949 நவம்பர் 26ம் நாள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1950 ஜனவரி 26 இந்திய அரசியலமைப்புச் சட்டம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது. அந்நாளே குடியரசு நாளாக கொண்டாடப்படுகிறது. வரலாற்றுப் புகழ்வாய்ந்த அரசியல் சாசன நாளான நவம்பர் 26ம் நாள், இந்த ஆண்டு கல்லூரிகளில் ‘முன்னுதாரண மன்னர்’ மற்றும் ‘கிராம பாரம்பரிய பஞ்சாயத்து’ உள்ளிட்ட தலைப்புகளில் கருத்தரங்கு நடத்தப்பட வேண்டும் என்று பல்கலைக் கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது.

நவம்பர் 26ம் நாள் அரசியல் சட்ட நாளை மறைத்து, அரசு சார்பில் கல்லூரிகளில் பாரதம், பகவத் கீதை, வேத இலக்கியம், உபநிடதங்கள், பழங்கால பஞ்சாயத்து முறைகள் குறித்து கருத்தரங்குகள் நடத்துவதற்கு பா.ஜ., அரசு யூ.ஜி.சி., மூலம் அறிவிப்பை வெளியிட்டு இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நெறிமுறைகளான இறையாண்மை, சோசலிசம், சமயச் சார்பின்மை, மக்களாட்சி, குடியரசு முறை, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், தனிமனித மாண்பு, நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு இவை அனைத்தையும் தகர்த்து தவிடுபொடி ஆக்கும் வகையில்  பா.ஜ., அரசின் கடந்த எட்டு ஆண்டு கால செயல்பாடுகள் இருக்கின்றன. அரசியல் சட்டத்தையே தகர்க்க முனைந்திடும் இந்துத்துவ சனாதனச் சக்திகளின் முயற்சிகளை முறியடிக்க அரசியல் சாசன நாளில் உறுதி ஏற்போம். இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

33 + = 40