இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்க அழைப்பு விடுத்த ராகுலுக்கு அகிலேஷ் யாதவ் நன்றி

உத்தரப் பிரதேசத்திற்கு வர உள்ள இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்க ராகுல் காந்தி விடுத்த அழைப்புக்கு அகிலேஷ் யாதவ் நன்றி தெரிவித்தார்.

ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை யாத்திரை நாளை உத்தரப் பிரதேசம் செல்கிறது. இந்நிலையில், யாத்திரையில் பங்கேற்க ராகுல் காந்தி விடுத்த அழைப்புக்கு அகிலேஷ் யாதவ் பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக ராகுல் காந்திக்கு அனுப்பிய கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது: ”இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்க அழைப்பு விடுத்ததற்கு நன்றி. இந்த யாத்திரையின் நோக்கம் நிறைவேற வாழ்த்துகள்.

இந்தியா என்பது அதன் எல்லைகளைக் கடந்த ஓர் உணர்வு. அன்பு, அகிம்சை, உணர்ச்சி, ஒத்துழைப்பு, நல்லொழுக்கம் போன்றவை இந்தியாவை ஒன்றிணைக்கும் நேர்மறை கூறுகளாக உள்ளன. இவற்றை உள்ளடக்கியதாக இருக்கும் இந்த யாத்திரை அதன் நோக்கத்தில் வெற்றி பெறும் என நம்புகிறேன்” என தனது பதில் கடிதத்தில் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். யாத்திரையில் பங்கேற்பது குறித்து அவர் எதையும் தெரிவிக்கவில்லை.

எனினும், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி, “இந்திய ஒற்றுமை யாத்திரையில் அகிலேஷ் யாதவ் பங்கேற்க மாட்டார். கட்சியில் இருந்து பிற தலைவர்கள் யாரும் இந்த யாத்திரையில் பங்கேற்க மாட்டார்கள்” என தெரிவித்தார். இந்த யாத்திரை தொடர்பாக கடந்த வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், ”எங்கள் கட்சியின் கொள்கை வேறுபட்டது. ஆனால், பாஜகவும் காங்கிரசும் ஒன்றுதான்” என விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

67 + = 76