இந்தியா மீது இணையதள தாக்குதல் : 2 ஆயிரம் இந்திய வலைதளங்கள் ஹேக்கிங்

இந்தியாவில் உள்ள 2 ஆயிரத்திற்கும் கூடுதலான வலைதளங்களை இந்தோனேசியா, மலேசியா ஹேக்கர் குழுக்கள் ஹேக்கிங் செய்துள்ளன.

தேசிய தொலைக்காட்சி சேனல் ஒன்றில், கடந்த மே மாதம் 27-ந் தேதி நடந்த விவாத நிகழ்ச்சி ஒன்றில், ஒருவர் பேசியதற்கு எதிர்வினையாற்றும் வகையில் பேசிய பா.ஜ.க.வின் முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவின் சர்ச்சைக்குரிய பேச்சை அடுத்து, இந்தியா மீது இணையதள தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

 நாட்டில் உள்ள 2 ஆயிரத்திற்கும் கூடுதலான வலைதளங்களை இந்தோனேசியா மற்றும் மலேசியா நாடுகளில் இருந்து செயல்படும் ஹேக்கர் குழுக்கள் ஹேக்கிங் செய்துள்ளன. இதனை குஜராத் போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர். அவற்றில் டிராகன் போர்ஸ் மலேசியா மற்றும் ஹேக்டிவிஸ்ட் இந்தோனேசியா ஆகிய இரு ஹேக்கர் குழுக்களை அதிகாரிகள் பட்டியலிட்டு உள்ளனர்.

இதுபற்றி குஜராத்தின் ஆமதாபாத் நகர இணையதள குற்ற பிரிவுக்கான காவல் துணை ஆய்வாளர் அமித் வசவா கூறும்போது, 2 ஆயிரத்திற்கும் கூடுதலான வலைதளங்கள் ஹேக்கர் குழுக்களால் ஹேக்கிங் செய்யப்பட்டு உள்ளன. இதனை தொடர்ந்து, ஆமதாபாத் குற்ற பிரிவு போலீசார், மலேசியா மற்றும் இந்தோனேசிய அரசாங்கங்களுக்கும், இன்டர்போல் போலீசாருக்கும் தகவல் தெரிவித்து உள்ளதுடன், இரு ஹேக்கர் குழுக்கள் மீது லுக்-அவுட் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்கும்படியும் உத்தரவிடப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார்.

இந்த இரு ஹேக்கர் குழுக்களும், இந்தியா மீது இணையதள தாக்குதலை தொடங்கி நடத்தும்படி உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் ஹேக்கர்கள் குழுவினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன. இதுதவிர, அரசாங்கம் மற்றும் தொழிற்சாலைகளின் பல்வேறு வலைதளங்களும் முடக்கப்பட்டு உள்ளன. இந்த ஹேக்கர்கள், ஆந்திர பிரதேச போலீசார் மற்றும் அரசின் தகவல்களை கசிய விட்டு உள்ளனர். பான் மற்றும் ஆதார் விவரங்களும் வெளியிடப்பட்டு உள்ளன. தானே போலீசாரின் வலைதளமும் முடக்கப்பட்டு உள்ளது என அமித் வசவா தெரிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + 1 =