இந்தியா கூட்டணியை பார்த்து பிரதமர் மோடிக்கு பயம் வந்து விட்டது: முன்னாள் முதல்வர் நாராயணசாமி

இந்தியா கூட்டணியை பார்த்து பிரதமர் மோடிக்கு பயம் வந்து விட்டது என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

ராகுல்காந்தி எம்.பி. பாதயாத்திரை மேற்கொண்டு ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் புதுவை காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. புதுச்சேரியில் பிள்ளைத்தோட்டம் பெரியார் சிலை அருகே தொடங்கிய இந்த ஊர்வலத்துக்கு காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தலைமை தாங்கினார். இந்த ஊர்வலம் காமராஜர் சாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக வந்து ஆம்பூர் சாலை அருகே நிறைவடைந்தது. ஊர்வலத்தின் முடிவில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது, வருகிற பாராளுமன்ற தேர்தலில் அதிகப்படியான இடத்தை பிடித்து காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆட்சி வரும். அப்போது ராகுல்காந்தி பிரதமராவார்.

இந்தியா கூட்டணியை பார்த்து பிரதமர் மோடிக்கு பயம் வந்து விட்டது. சோனியாகாந்தி 17 கேள்விகள் கேட்டு பிரதமருக்கு கடிதம் அனுப்பினால், அதற்கு பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலத் ஜோஷி பதில் சொல்லுகிறார். புதுவையில் கவர்னரும், முதலமைச்சரும் சேர்ந்து கியாஸ் சிலிண்டர் மானிய திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். ஆனால் மானியம் இன்னும் வரவில்லை. ஏனெனில் அந்த திட்டத்துக்கு ரூ.120 கோடி தேவை. ஆனால் அதற்கு நிதி ஒதுக்கவில்லை. நாம் கருத்து வேறுபாடுகளை மறந்து வருகிற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடவேண்டும். அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என நாராயணசாமி தெரிவித்துள்ளார்.