
இந்தியாவில் உள்ள அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிலும் அந்தந்த தொகுதி தலைமையிடத்தில் அதன் உறுப்பினர்களுக்கு மக்கள் பணியாற்ற மத்திய அரசு அலுவலகம் அமைக்க வேண்டும் என விவசாய முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் நிறுவனர் செல்ல.இராசாமணி, பொதுச் செயலாளர் கே.பாலசுப்ரமணியன் ஆகியோர் பாரத பிரதமர், பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- தற்போது இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் 25 முதல் 100க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கென்று அவர்களுடைய தொகுதியில் தனி அலுவலகம் இருப்பதாக இதுவரை தெரியவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதியை சென்று சந்திக்க வேண்டுமென்றால் அவர்களுக்கான தனி அலுவலகத்தில் இருந்தார்கள் என்றால் அவர்களை சந்திப்பதற்கு ஏதுவாக அமையும்.
சாதாரணமாக எடுத்துக் கொண்டால் ஒரு கிராம ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவருக்கு என்று தனி அலுவலகமும், ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் அலுவலகமும், மாவட்ட ஊராட்சி குழுவில் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் அலுவலகமும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எனத் தனி அலுவலகமும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு என்று இதுவரை தமிழகத்தில் மற்றும் இதர மாநிலங்களில் தனி அலுவலகம் இருப்பதாக தெரியவில்லை.
எனவே உடனடியாக ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் அவர்களுடைய தலைமை இடத்தில் அவர்களுக்கான பிரத்தியேக அலுவலகம் அமைத்து அங்கு உதவியாளர்களையும் நியமித்து மத்திய அரசினுடைய ஒவ்வொரு திட்டமும் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்று திட்ட விளக்க உரை கையேடும், அதேபோல விவசாயிகளுக்கு மத்திய அரசின் மூலம் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றது என்ற குறிப்புகளும் அந்த அலுவலகத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும்.
மேலும் மத்திய அரசுக்கு தொகுதி மக்களால் அனுப்பப்படும் குறைகள், பிரச்சனைகள் குறித்த மனுக்கள், ஆவணங்களை நாடாளுமன்ற உறுப்பினருடைய தனி அலுவலகத்தில் இருந்து நேரடியாக கணினி மூலம் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்புவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அப்பொழுதுதான் ஒவ்வொரு கடைக்கோடியில் இருக்கும் விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், பட்டாசு உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள், கைவினைஞர்கள், இளைஞர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், அரசு ஊழியர்கள், நெசவாளர்கள், தொழில் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் தங்களது தேவைகளையும், பிரச்சனைகளையும், நாடாளுமன்ற உறுப்பினர் நேரடிப் பார்வையில் மத்திய அரசினுடைய சம்பந்தப்பட்ட துறைக்கு உடனுக்குடன் எடுத்துச்செல்ல முடியும்.
அதேபோல துறைசார்ந்த அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாராளுமன்ற அலுவலகத்தைத் தேர்வுசெய்து தினந்தோறும் காணொலிக் காட்சி மூலமாக பொது மக்களுடைய குறைகளை நேரடியாக கேட்டு அறியவும் ஏற்பாடு செய்ய வேண்டும். இதனால் மத்திய அரசினுடைய திட்டங்கள் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் எளிதில் சென்றடைய ஒரு வாய்ப்பாக அமையும். எனவே இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த பாரத பிரதமரும், பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சரும் நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் பாலமாக திகழக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு என அவர்களுடைய தொகுதியில் அலுவலகம் கட்டுவதற்கு ஆவன செய்யுமாறும், இந்த கட்டிடம் முதன்முதலில் தமிழ்நாட்டில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அமைத்திட நடவடிக்கை எடுக்க ஆவன செய்யுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என கூறப்பட்டுள்ளது.