இந்தியாவின் வேலைவாய்ப்புத் துறையின் முதுகெலும்பை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது நண்பர்களால் உடைத்துள்ளனர் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.
உ.பி., மாநிலம் அமேதியில் உள்ள ஜகதீஷ்பூரில் காங்கிரஸ் சார்பில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் எம்.பி., ராகுல், பொதுச்செயலர் பிரியங்கா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பிரியங்கா பேசுகையில்: பிரதமர் மோடி, 5 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? உக்ரைனில் நடந்த போரைப் பற்றி தெரிந்த அவருக்கு, இந்த விவசாயிகளின் பிரச்னை தெரியவில்லையா? உங்கள் (மக்கள்) சூழ்நிலைகளுக்கு நீங்களே பொறுப்பு. நீங்கள் கண்களை மூடிக்கொண்டு ஓட்டளியுங்கள். உங்கள் ஓட்டு மிகப் பெரிய பொறுப்பு, அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீங்கள் வருந்தக்கூடும் என்பதால் புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுங்கள். இது உங்களின் வளர்ச்சிக்கான நேரம் என பேசினார்.
ராகுல்காந்தி பேசுகையில்: காங்கிரஸ் ஆட்சி 70 ஆண்டுகளாக எதுவும் செய்யவில்லை என பா.ஜ.,வினர் கூறுகின்றனர். இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் எந்தவொரு வேலைவாய்ப்பையும் கொடுக்கவில்லை. மாறாக, சிறு கடைக்காரர்கள், வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தான் வேலைவாய்ப்பு அளிக்கின்றனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்தியாவின் வேலைவாய்ப்புத் துறையின் முதுகெலும்பை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது நண்பர்களால் உடைத்துள்ளனர். இனிவரும் காலங்களில் இந்த நாட்டின் இளைஞர்களுக்கு வேலை கிடைக்காது என்பதை நீங்கள் பார்ப்பீர்கள். கோவிட் சமயத்தில் நான் சொல்வதை யாரும் கேட்கவில்லை, ஆனால் கங்கையில் உடல்கள் மிதந்ததை மக்கள் பார்த்தனர். இவ்வாறு அவர் பேசினார்.