புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும் நீண்ட காலமாக பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்ப்பது தொடர்பான ஒரு நாள் பயிற்சி மாநில திட்ட இயக்குநர் அவர்களின் அறிவுறுத்தல் படி புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
வந்திருந்த அனைவரையும் உதவித்திட்ட அலுவலர் ஜெ.சுதந்திரன் வரவேற்று பேசினார். பயிற்சிக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மா.மஞ்சுளா தலைமை தாங்கி பயிற்சியினை தொடங்கி வைத்து பேசும்போது கூறியதாவது:- பள்ளி செல்லாக் குழந்தைகளை கண்டறிந்து அவர்களை வயதிற்கேற்ற வகுப்பில் சேர்க்கை செய்வதற்கான இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் வழிமுறைகளை கையாளவேண்டும். மாணவர்களின் கற்றல் அடைவு நிலைக்கு தகுந்தவாறு பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளையும் வயதிற்கேற்ற வகுப்பில் சேர்க்கை செய்யும் முறை ஆகியவற்றை செயல்படுத்தவேண்டும். பள்ளி செல்லாக் குழந்தைகளுக்கு பள்ளிக்கல்வித்துறை மற்றும் பிற துறைகளிலிருந்தும் கொடுக்கின்ற நலத்திட்டங்களை மாணவர்களுக்கு தெரியப்படுத்தி அதன் மூலம் பள்ளிகளில் சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர் சேர்க்கையினை உறுதிப்படுத்த வேண்டும்.

நீண்ட காலமாக பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்கள், ஒரு நாள் கூட பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்கள் மற்றும் பள்ளிகளிலிருந்து இடை நின்ற மாணவர்கள் ஆகியோரை மீண்டும் பள்ளிகளில் சேர்க்கை செய்ய அனைவரது ஒருங்கிணைப்புடன் ஒவ்வொரு வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநரும் தீவிரமாக செயல்பட வேண்டுகிறேன் என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்டக்கல்வி அலுவலர்கள் புதுக்கோட்டை ரமேஷ்( இடைநிலைக்கல்வி), அறந்தாங்கி முருகேசன் ( பொறுப்பு – இடைநிலைக்கல்வி), சுவாமி முத்தழகன்( தொடக்கக்கல்வி), சண்முகம்( தொடக்க கல்வி), ஆண்றனி ( தனியார் பள்ளிகள்), தங்கமணி ( தொடக்கக்கல்வி – பொறுப்பு), ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்இதில் பள்ளிச் செல்லாக் குழந்தைகளுக்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ப. செந்தில்குமார் கலந்துகொண்டு பயிற்சி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் வட்டாரக்கல்வி அலுவலர்கள், பள்ளித்துணை ஆய்வாளர்கள்,வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் கலந்துகொண்டனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாந்தகுமார் நன்றி கூறினார்.