இசை நிகழ்ச்சி குளறுபடி – ஏ.ஆர்.ரகுமானுக்கு நடிகர் கார்த்தி ஆதரவு

நடந்த குளறுபடிகளுக்கு ஏ.ஆர்.ரகுமான் எந்த வகையிலும் பொறுப்பல்ல, அவரை வெறுக்க வேண்டாம் என்று நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி செப்டம்பர் 10-ஆம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் ரசிகர்கள் சிரமப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சி சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது. ரசிகர்கள் பலர் இந்த மாதிரியான ஒரு நிகழ்ச்சி நடக்காமலேயே இருந்திருக்கலாம். இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய ஸ்கேம் என்று சர்ச்சையான கருத்துகளை பதிவிட்டு வந்தனர். அதுமட்டுமல்லாமல் பலரும் ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக பல விமர்சனங்களை அடுக்கி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் கார்த்தி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவு தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், நாம் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக ஏ.ஆர்.ரகுமான் மீது அன்பு செலுத்தி வருகிறோம். இசை நிகழ்ச்சியின் போது நடந்தது தற்செயலானது. இதனால் ஏ.ஆர்.ரகுமான் பாதிக்கப்பட்டிருப்பார். இந்த குழப்பங்களுக்கு மத்தியில் என் குடும்பமும் அந்த நிகழ்ச்சியில் இருந்தது, ஆனால் நான் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக நிற்கிறேன். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பொறுப்பேற்பார்கள் என்று நம்புகிறேன். நம் அனைவர் மீதும் ஏ.ஆர்.ரகுமான் அன்பு செலுத்துவது போன்று ரசிகர்களும் வெறுப்பை தவிர்த்து அன்பை தேர்ந்தெடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.