ஆஸ்பத்திரியில் இருந்து பிறந்த குழந்தையை கடத்திய இளம்பெண் கைது

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், அக்காயபள்ளியை சேர்ந்தவர் சோனி (வயது 28). இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. இவரது மைத்துனருக்கு திருமணமான ஒரே ஆண்டில் குழந்தை பிறந்து உள்ளது. இதனால் சோனியின் உறவினர்கள் அவரை ஏளனமாக பேசி வந்துள்ளனர். இந்த நிலையில் எப்படியாவது ஒரு குழந்தையை எடுத்து வந்து தனக்கு பிறந்ததாக கூறி உறவினர்களை ஏமாற்ற வேண்டும் என எண்ணினார். இதற்காக அவர் அமேசானில் ரூ.16 ஆயிரம் கொடுத்து பிளாஸ்டிக் தொப்பையை வாங்கி தனது வயிற்றில் கட்டிக்கொண்டு கர்ப்பிணியாக உள்ளதாக கூறி வலம் வந்தார். மாதங்கள் செல்ல செல்ல குழந்தை எப்படியாவது வேண்டுமே என்று எண்ணிய அவர் எங்கிருந்தாவது குழந்தையை கடத்தி வரவேண்டும் என்று திட்டமிட்டார்.

கடப்பா மாவட்டம் சின்ன தெனாலியை சேர்ந்தவர் மெஹபூப் ஜான் நிறைமாத கர்ப்பிணியான இவர் கடந்த டிசம்பர் மாதம் 25ஆம் தேதி ரிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார். மறுநாள் ஆபரேஷன் மூலம் மெஹபூப் ஜானுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் அந்த ஆஸ்பத்திரிக்கு சென்ற சோனி தான் 7 மாத கர்ப்பிணியாக உள்ளதாகவும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வந்ததாகவும் அங்குள்ள டாக்டர்களிடம் தெரிவித்தார். பின்னர் மெஹபூப் ஜான் குழந்தை பெற்ற வார்டுக்கு சென்ற அவர் குழந்தையை வாங்கி கொஞ்சினார்.

பின்னர் தனது கணவர் ஆஸ்பத்திரிக்கு வெளியே இருப்பதாகவும் குழந்தையை அவரிடம் காண்பித்து விட்டு வருவதாக குழந்தையை வாங்கிச் சென்றார். குழந்தையை வாங்கிச்சென்ற பெண் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த மெஹபூப் ஜான் இது குறித்து தனது உறவினர்கள் மற்றும் அங்குள்ள காவலாளிகளிடம் தெரிவித்தார். அவர்கள் ஆஸ்பத்திரி முழுவதும் தேடிப் பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து கடப்பா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து நகரம் முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கடப்பா ஐ.டி.ஐ சந்திப்பு அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக ஆட்டோவில் வந்த பெண்ணிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த பெண் ஆஸ்பத்திரியில் இருந்து குழந்தையை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து குழந்தையை மீட்ட போலீசார் சோனியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + 3 =