ஆவுடையார்கோவில் காவல்துறையை கண்டித்து அறந்தாங்கி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

ஆவுடையார்கோவில் காவல்துறையை கண்டித்து அறந்தாங்கி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா தாழனூர் வட்டத்தில்  கிராம உதவியாளராக வேலை செய்பவர் பெரியசாமி. இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக மணல் கடத்தலில் ஈடுபட்ட ஆவுடையார்கோவில் காமராஜ் நகரைச் சேர்ந்த அங்கமுத்து மகன் காளிதாஸ் மற்றும் அஜித் ஆகியோரை கண்டித்ததால் அவர்கள் இருவரும் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு பெரியசாமியை கட்டையால் தலையில் அடித்தும், கீழே உப்பை பரப்பி அதில்  மண்டியிட செய்தும் துன்புறுத்தியுள்ளனர். இதனைத்தொடர்ந்து படுகாயமடைந்த பெரியசாமி ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் பெரியசாமியை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து அறந்தாங்கி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பாக குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி தலையாரிகள் சங்க மாவட்ட செயலாளர் வேத செல்வம் தலைமையில் மாநில பொதுச்செயலாளர் யாக்கோபு மற்றும் சிறப்பு பேச்சாளர் ஜபருல்லா ஆகியோர் உட்பட 100க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் இதுகுறித்து சார் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.