
ஆவுடையார்கோவிலில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற கிராம உதவியாளரின் மண்டை உடைக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனை எதிரில் தாழனூர் கிராம உதவியாளராக வேலை செய்யும் பெரியசாமி என்பவர் மணல் கடத்தலைத் தடுக்கும் பொருட்டு பணியில் இருந்துள்ளார்.
இந்நிலையில் ஆவுடையார்கோவில் காமராஜர் நகரைச் சேர்ந்த மணல் கடத்தலில் ஈடுபட்ட அங்கமுத்து மகன் காளிதாஸ், அஜித் மற்றும் பலர் சேர்ந்துகொண்டு மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற பெரியசாமியின் தலையில் கட்டையால் அடித்து மண்டையை உடைத்து உள்ளனர். பின்பு தரையில் உப்பைக் கொட்டி மண்டியிட செய்துள்ளனர். இதனால் காயமடைந்த கிராம உதவியாளர் பெரியசாமி ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனை கண்டித்து ஆவுடையார்கோவில் கிராம உதவியாளர்கள் சங்கம் தலைவர் ஆர்.கார்த்திக், வட்டச் செயலாளர் சுமதி ஆகியோர் தலைமையில் 30க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் தாலுகா அலுவலகத்தில் குற்றவாளி காளிதாஸ் மற்றும் அஜித் ஆகியோரை கைது செய்து குண்டாஸில் சிறையில் போட வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேரணியாக சென்று காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தனர்.