ஆளுநர் ஆர்.என்.ரவி ‘தமிழகம்’ என கூறியதற்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை விளக்கம்

“தமிழ்நாட்டை தனிநாடு போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிடக் கூடாது. அது தன் நாட்டின் தன் நாடாக இருக்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில்தான் தமிழக ஆளுநர் அவ்வாறு பேசியிருக்கிறார் என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும்” என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

திருச்சியில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்று பேசியிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அவர் அவ்வாறு பேசியதன் உட்பொருளை நாம் கொஞ்சம் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால் பிரிவினைவாதக் கருத்துகள் அதிகமாக இப்போது வர ஆரம்பித்திருக்கிற நேரத்தில் தமிழக ஆளுநர் அவ்வாறு கூறியிருக்கிறார்.

அவர் கூறுவதில், பாரத தேசத்தை தன்நாடு என்று எல்லோரும் உணர்ந்துகொள்ள வேண்டும். தனிநாடு என்று ஏற்றுக்கொள்ளக்கூடாது. தமிழ்நாடு தன்நாடு, தன்நாட்டிற்குள் ஒரு தன்நாடு என்று எடுத்துக்கொள்ள வேண்டும். தனிநாடு என்று எடுத்துக்கொள்ளக்கூடாது என்ற ஓர் அர்த்தத்தில்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நான் பார்க்கிறேன்.

ஏனென்றால், சமீபகாலமாக தமிழகத்தில் சில அரசியல் கட்சித் தலைவர்கள், சில இயக்கங்களின் தலைவர்கள் பிரிவினை பேசுவது அதிகமாகி இருக்கிறது. இது தமிழ்நாட்டை தனிநாடு போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிடக்கூடாது அது தன்நாட்டின் தன்நாடாக இருக்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் அவர் பேசியிருக்கிறார் என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

31 − = 29