ஆலங்குடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாய்மாமன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா பூவாணம் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி கடந்த 2019ம் ஆண்டு, புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கன்னக்கன்காடு தாய்மாமன் வீட்டில் தங்கி உடல்நிலை சரியில்லாத பாட்டியை கவனித்து வந்துள்ளார்.
இதனையடுத்து தாய்மாமன் முருகேசன் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த நிலையில் சிறுமியும் தாய்மாமன் முருகேசன் தன்னை திருமணம் செய்து கொள்வார் என்று நினைத்து கண்டுகொள்ளமால் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சிறுமியின் தாய்மாமன் கன்னக்கன்காட்டில் உள்ள அஞ்சம்மாள் என்ற பெண்ணை சமீபத்தில் திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையறிந்த சிறுமி மனம் மாறி தனது தாயிடம் பாலியல் உண்மைகளை கூறியுள்ளார்.
இதையடுத்து சிறுமியின் தாய் தமிழரசி ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் மகளிர் காவல் ஆய்வாளர் ஹேமலதா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி ஆகியோர் முருகேசனை கைது செய்து விசாரித்து வந்தனர்.
விசாரணையில் நடந்த சம்பவங்களை முருகேசன் ஒப்புக்கொண்டதால் அவரை போக்சோ தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து, ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நல்லகண்ணன் முன்பு ஆஜர்படுத்தி திருமயம் சிறையில் அடைத்தனர்.