ஆலங்குடி அருகே கோவிலூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, கோவிலூர் முத்து மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 600 ஜல்லிக்கட்டு காளைகள் 250 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன் வீரர்களுக்கு உறுதிமொழி ஏற்றி வைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பாக விளையாடிய காளைகளுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு காளைகள் முட்டியதில் காவல் துறையை சேர்ந்த ஒருவர் உள்பட 16 பேர் காயம் அடைந்தனர். ஜல்லிக்கட்டு போட்டியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, கோட்டாட்சியர் முருகேசன், திருவரங்குளம் ஒன்றிய பெருந்தலைவர் வள்ளியம்மை தங்கமணி, திமுக ஒன்றிய செயலாளர் தங்கமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.