புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவை சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தலைமையில் நடைபெற்ற விழாவில், தீவிர சிகிச்சை பிரிவைத் தொடங்கி வைத்து அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசியதாவது,
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில், ‘மக்களைத் தேடி மருத்துவம்”; ‘இன்னுயிர் காப்போம் 48” உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.மேலும், கிராமப்புறங்களிலும் பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில்.ஆலங்குடி அரசு மருத்துவமனையில் ரூ.89 லட்சம் மதிப்பிலான உயர்தர உயிர்காக்கும் கருவிகளுடன், ரூ.11 லட்சம் மதிப்பீட்டிலான கட்டமைப்பு வசதிகள் என மொத்தம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தீவிர சிகிச்சை பிரிவு மக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இப்பிரிவில் மாரடைப்பு, விஷ முறிவு, மூச்சு திணறல், அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்பு, மகப்பேருக்கு பின் கவனிப்பு, கைகால் பலவீனம், மூளை ரத்தக் கசிவு, விபத்து உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ரத்த பரிசோதனை கருவி, மூச்சு சுவாச கருவி, உடல் வெப்பத்தை சம நிலையில் வைக்கும் கருவி, மாரடைப்பு சரி செய்யும் கருவி, பிராணவாயு செலுத்தும் கருவி, தானியங்கி கருவி மூலம் படுக்கையை சரி செய்யும் வசதி, செவிலியர்களுக்கு அவசரகால செய்தி அனுப்பும் கருவி, உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் தீவிர சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது, இதன் மூலம் ஆலங்குடி தொகுதிக்கு உட்பட்ட மக்கள் அனைவருக்கும் உயர்தரத்திலான சிகிச்சைகள் கிடைக்கப் பெறுவது உறுதி செய்யப்படும் என்றார்.இதில் இணை இயக்குனர் (மருத்துவப்பணிகள்) ராதிகா, தலைமை மருத்துவ அலுவலர் பெரியசாமி, வட்டாட்சியர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.