ஆருத்ரா கோல்டு நிறுவன விவகாரத்தில் ரூ.1,000 கோடி மோசடி? – 2 முகவர்கள் கைது

ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் முக்கிய முகவர்கள் 2 பேரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர்.

சென்னை, அமைந்தக்கரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த நிறுவனம் ஆருத்ரா. இந்த நிறுவனம் பொதுமக்களுக்கு 20 முதல் 30 சதவீதம் வரை அதிக வட்டித் தருவதாக கூறி ஆசைகாட்டி சுமார் ஆயிரம் கோட்டிக்கு மேல் நிதி திரட்டியது. ஆனால் வட்டியும், முதலும் முறையாக தரவில்லை.

இதனால் வாடிக்கையாளர்கள் பலர் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட 21 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். காஞ்சிபுரத்தில் ஜி.கே.எம் டிரேடிங் என்ற பெயரில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தை காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ராஜா செந்தாமரை மற்றும் அவரது சகோதரர் முத்து ஆகியோர் நடத்தி வந்தனர். இவர் ஆருத்ரா கோல்டு நிறுவனத்துக்கு முக்கிய முகவராக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இவர் தமது ஜி.கே.எம். டிரேடிங் மூலம் காஞ்சிபுரம் பகுதியில் பலரிடம் முதலீடு பெற்று ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். இதுபோல் சுமார் ரூ.500 கோடி அளவுக்கு இவர் காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முதலீடு திரட்டியதாகத் தெரிகிறது.

இது தொடர்பாக சென்னை குற்றப்பிரிவு போலீஸார் இவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இவரிடம் நடத்திய விசாரணையில் சுமார் 200 பேரிடம் இந்த ரூ.500 கோடி முதலீட்டை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இதேபோல் இந்த மோசடி தொடர்பாக சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த சந்திர கண்ணன் என்ற முகவரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். அவரது வீட்டிலிருந்து 90 மூட்டைகள் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவரிடம் பணப் பரிவர்த்தனை உட்பட பல்வேறு விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இந்நிறுவனத்தில் பலர் தனது மகள் திருமணத்துக்கு வைத்திருந்த பணம், ஓய்வூதியப் பலன்கள் மூலம் கிடைத்த பணம்,

வாழ்நாள் முழுவதும் சேமித்து வீடு வாங்குவதற்கு சேர்த்து வைத்திருந்த பணம் ஆகியவற்றை அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு முதலீடு செய்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில் தற்போது முதலீடு செய்த பணமாவது வருமா என்பது தெரியாமல் தவத்து வருகின்றனர். இந்த நிறுவனத்துடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் என்பது குறித்து தொடர்ந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

நடுத்தர மக்கள் பாதிப்பு

காஞ்சிபுரத்தில் உள்ள தொழிலாளர்கள், நடுத்தர மக்களை குறிவைத்து பல்வேறு மோசடி நிறுவனங்கள் செயல்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், நடுத்தர குடும்பத்தினர் இதுபோல் பல்வேறு நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து தங்கள் பணத்தை இழந்துள்ளனர். இதில் பல காவல் துறையினரும் தப்பவில்லை. மொத்தமாக காஞ்சிபுரம் பகுதியில் மட்டுமே ஆருத்ரா கோல்டு மட்டுமின்றி பல்வேறு நிதி நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து இழந்த தொகை ரூ.1,000 கோடி அளவுக்கு இருக்கும் என்று போலீஸார் தெரிவிக்கின்றனர்.

Similar Articles

Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 34 = 41

Advertismentspot_img

Instagram

Most Popular

x
error: Content is protected !!
%d bloggers like this: