
ஆரணி அடுத்த பையூர் கிராமத்தில் தரமற்ற (ரசாயனம் கலந்த) மிட்டாய்களை சாப்பிட்ட மூன்று சிறுவர்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தால் ஆரணி தாலுகா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த பையூர் கிராமத்திலுள்ள எம்ஜிஆர் நகர் காந்தி தெருவில் வசித்து வருபவர்கள் புருஷோத்தமன்- ரமணி தம்பதியினர். இவர்களுக்கு யுவராஜ் (9) என்ற ஒரு மகன் உள்ளார். இதே போன்று புருஷோத்தமன் வீட்டின் மாடியில் இவரது சகோதரரான ஹரிராம்-ரேவதி தம்பதியினரும் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மகேஷ்(10) தனஞ்செழியன் (9) என்ற இரண்டு 2 மகன்கள் உள்ளனர்.
ஆரணியிலுள்ள தனியார் பள்ளிகளில் மகேஷ், தனஞ்செழியன், யுவராஜ், ஆகிய மூன்று சிறுவர்களும் 4ம் மற்றும் 5ம் வகுப்பு பயின்று வருகின்றனர். மூன்று சிறுவர்கள் அவர்களது வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டு, பின்னர் மூன்று சிறுவர்கள் வீட்டின் அருகேவுள்ள பரிமளா பெருமாள் என்பவரின் கடைக்கு சென்று, தரமற்ற மிட்டாய்கள் வாங்கி சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து கடையில் மிட்டாய் வாங்கி சாப்பிட்டவுடன் வீட்டுக்கு வந்த மூன்று சிறுவர்களுக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டு வாந்தி எடுத்து மயங்கி கீழே விழுந்து உள்ளனர்.
இதனைக்கண்ட பெற்றோர்கள் பதற்றம் அடைந்து உடனடியாக மூன்று சிறுவர்களையும் ஆரணி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போது, பின்னர் மூவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டுமென்று கூறியதையடுத்து, அச்சிறுவர்களை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதனைத்தொடர்ந்து அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மூவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் ஆரணி கிராமிய காவல் நிலைய போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று தரமற்ற மிட்டாய்கள் விற்பனை செய்த கடையின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆரணி அருகே மலிவு விலையில் சிறுவர்கள் கவரும் வடிவமைப்பில் தரமற்ற ரசாயனம் கலந்த மிட்டாய் பொருட்களை வாங்கி சாப்பிட்ட சிறுவர்களின் உடலில் உபாதைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவத்தால் ஆரணி தாலூகா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.