‘ஆப்கானிஸ்தான் அரசியல் நிலவரம் நாளுக்கு நாள் மாறுதலுக்கு உள்ளாகி வரும் நிலையில், இந்தியா அதிரடியாக எதையும் செய்யாமல் பொறுமையுடன் நிலைமையை கவனிப்பதே தற்போதைக்கு சிறந்த வழி’ என, முன்னாள் துாதர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை சமீபத்தில் கைப்பற்றினர். அங்கு ஆட்சி அமைக்கும் பணியில் தலிபான் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யின் இயக்குனர் ஜெனரல் பைஸ் ஹமீத், ஆப்கானிஸ்தான் விரைந்துள்ளார்.இவரது திடீர் பயணத்தின் வாயிலாக, சர்வதேச சமூகத்தினர் ஏற்றுக் கொள்ளும் வகையிலான அரசை அமைக்க வேண்டிய அழுத்தம் தலிபான்களுக்கு உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.
ஆப்கன் நிலவரம் குறித்து நம் நாட்டின் முன்னாள் துாதர்கள் சிலர் கூறியதாவது:ஆப்கானிஸ்தானில் எப்படிப்பட்ட அரசு அமைய உள்ளது என்பதை இந்தியா பொறுமையாக கவனிப்பதே இப்போதைக்கு சிறந்த வழியாக இருக்கும். இந்த நேரத்தில் அதிரடியான நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது.பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,க்கும், தலிபான்களுக்கும் உள்ள நெருக்கம் அனைவரும் அறிந்தது. ஹக்கானி பயங்கரவாதிகள் தலிபான்களுக்கு மிக நெருக்கமாக உள்ளனர். ஆப்கனில் அமையவுள்ள புதிய அரசில் இவர்களின் தலையீடு நிச்சயம் இருக்கும்.
இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத குழுக்களை ஆப்கன் மண்ணில் வளர்த்துவிடக் கூடாது என்பதை, தலிபான்களிடம் நம் அரசு ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளது.ஆப்கன் அரசியல் நிலையில் நாளுக்கு நாள் மாற்றங்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. இந்த நேரத்தில் அவசரப்பட்டு நாம் கருத்து தெரிவிக்க கூடாது.இவ்வாறு அவர்கள்கூறினர்
ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் இந்தியா பொறுமையுடன் இருப்பதே நல்லது: முன்னாள் தூதர்கள் அறிவுரை
