ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் நாட்டு மக்களை மீட்டவுடன் படைகள் முழுமையாக திரும்பும் – அதிபர் ஜோ பைடன்

ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை திரும்பப் பெறும் முடிவில் உறுதியாக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

 வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆப்கானிஸ்தானை கட்டமைப்பதற்காக அமெரிக்க படைகள் அங்கு அனுப்பி வைக்கப்படவில்லை எனக் கூறினார். அமெரிக்கா மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை ஒழிக்கவும், அமெரிக்காவுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் ஒரு தளமாக பயன்படுத்தப்படுவதை தடுக்கவுமே அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானுக்கு சென்றதாகவும் பைடன் கூறினார்.

 அந்த வகையில் அமெரிக்காவின் நோக்கம் நிறைவேறிவிட்டதால் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுவதாகவும் அதிபர் பைடன் தெரிவித்தார். இதன்மூலம் ஆப்கானிஸ்தானை தாண்டி பயங்கரவாத அச்சுறுத்தல் முறியடிக்கப்பட்டுள்ளதாக கூறினார். தலிபான்களை ஒடுக்க ஆப்கான் ராணுவத்துக்கு அமெரிக்க அனைத்து வகைகளிலும் உதவி செய்தப்போதும், எதிர்த்து போராடாமல் ஆப்கானிஸ்தான் ராணுவம் சரண் அடைந்துவிட்டதாக குறிப்பிட்டார்.

 ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் நாட்டு மக்களை மீட்டவுடன் படைகள் முழுமையாக திரும்பும் எனவும் பேசினார். அதேநேரத்தில் ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், அந்நாட்டு மக்களுக்கு அமெரிக்க தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றார். மேலும் அமெரிக்க சொத்துக்களை தலிபான்கள் தாக்கினால் பதிலடி மோசமாக இருக்கும் எனவும் அதிபர் பைடன் தெரிவித்தார்.