‘ஆப்கானிஸ்தானில் இருந்து, ஆக., 31க்குள் அமெரிக்க படையினர் வெளியேறாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என, தலிபான்கள் எச்சரித்து உள்ளனர்.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து, ஆக., 31க்குள் அமெரிக்க படையினர் வெளியேறுவர் என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். இதையடுத்து தலிபான்கள் அதிரடியாக தாக்குதல் நடத்தி, ஆப்கன் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அதிபர் ஜோ பைடன் கூறும்போது, ‘ஆப்கனில் இருந்து ராணுவத்தை முழுமையாக வெளியேற்றும் காலக்கெடு நீட்டிப்பு குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது’ என்றார்.
இது குறித்து தலிபான்களின் செய்தி தொடர்பாளர் சுஹைல் ஷாஹின் கூறியதாவது:அனைத்து படைகளையும் ஆக., 31க்குள் திரும்ப பெறுவதாக ஜோ பைடன் அறிவித்தார்.தற்போது அவர்கள் வெளியேறுவதற்கான காலத்தை நீட்டிக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.படைகள் வெளியேற அமெரிக்கா அல்லது பிரிட்டன் கூடுதல் அவகாசம் கோரினால், அதை நாங்கள் ஏற்க மாட்டோம். அதனை மீறினால் கடும் விளைவுகளை அவர்கள் சந்திக்க நேரிடும்.இவ்வாறு அவர் கூறினார்.