ஆன்-லைன் சூதாட்ட தடைக்கு கவர்னர் கேட்ட விளக்கம் பதிலளித்து தமிழக அரசு கடிதம்: அமைச்சர் ரகுபதி

ஆன்-லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா சட்டசபையில் கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. அதன்பிறகு இந்த சட்ட மசோதாவை கவர்னரின் ஒப்புதலுக்கு சட்ட அமைச்சகம் அனுப்பியது. ஆனால், இந்த சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி உடனடியாக ஒப்புதல் வழங்கவில்லை.

இது தொடர்பாக பல தரப்பில் இருந்தும் கவர்னருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சமீபத்தில், ஆன்-லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு கவர்னர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. அவருக்கு சட்ட மசோதாவில் சந்தேகம் இருந்தால் அதை தெளிவுபடுத்துவோம் என்று கூறி இருந்தார்.

இந்நிலையில் ஆன்-லைன் சூதாட்ட விளையாட்டு தடை சட்ட மசோதா தொடர்பாக கவர்னர் சில விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு அதை திருப்பி அனுப்பி இருந்தார். அதில் ஆன்-லைன் ரம்மி சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ள தண்டனைகள் விதிப்பது தொடர்பான அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளதா? என்றும், இதற்கு முன்பாக கொண்டு வரப்பட்ட ஆன்-லைன் ரம்மி தடை சட்டத்திற்கு நீதிமன்றம் கேட்ட சில கேள்விகளையும் கவர்னர் குறிப்பிட்டு இருந்ததாக தெரிகிறது.

இந்த விளக்க கடிதம் சட்டத்துறைக்கு கிடைத்ததும் அதை உள்துறைக்கு அனுப்பி விரிவான பதில் தயாரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் உள்துறை அதிகாரிகள் கவர்னரின் விளக்க கடிதத்துக்கு பதில் தயாரித்து வருகிறார்கள். இந்த விரிவான பதிலுக்கு அரசின் அனுமதி கிடைத்ததும் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், கவர்னர் கேட்ட விளக்கங்களுக்கு பதிலளித்து தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா குறித்து கவர்னர் கேட்ட விளக்கங்களுக்கு பதலளித்து தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது. உரிய விவரங்களை சேகரித்து முறையாக ஆய்வு செய்து வல்லுநர் குறித்த அறிக்கைக்குப் பிறகே சட்ட மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. ஆன்-லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் மசோதா, அரசியலமைப்பு சட்டத்திற்குட்பட்டே கொண்டு வரப்பட்டது. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் மசோதாவை பரிசீலிப்பதாக கவர்னர் கூறியுள்ளார். இருப்பினும், தடை மசோதாவிற்கு கவர்னர் தாமதமின்றி ஒப்புதல் தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

47 − = 44