ஆந்திர மீனவர்கள் பறிமுதல் செய்த இழுவை விசைப்படகை இரண்டு மாதங்களுக்கு பிறகு மீட்பு

ஜிபிஎஸ் கருவி பழுதடைந்ததால் வழிதவறிச் சென்ற தமிழக மீனவர்களிடம் இருந்து ஆந்திர மீனவர்கள் பறிமுதல் செய்த இழுவை விசைப்படகை இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீட்டுக் கொண்டு வந்த தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தார்,

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீனவ கிராமத்தை சேர்ந்தவர் செல்லக்கண்ணு மகன் பிரபு (39)  இவர் கடந்த ஜூலை 12ஆம் தேதி மீனவர்கள் 8 பேருடன் காரைக்கால் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க 240 சிசி திறன் கொண்ட இழுவை விசைப்படகில் கடலுக்கு சென்றுள்ளனர். அப்போது ஜிபிஎஸ் கருவி பழுதடைந்ததால் திசைமாறி ஆந்திர கடல் பகுதிக்கு சென்ற படகினை ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சிறை பிடித்தனர்.

தகவலறிந்த தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தார் மீன்வளத்துறை அதிகாரிகளின் உதவியுடன் ஆந்திர மாநிலத்திற்கு சென்று, மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மீனவர்கள் 9 பேரையும் மீட்டு கொண்டு வந்தனர். ஆனால் பறிமுதல் செய்யப்பட்ட படகினை விடுவிக்க ஆந்திர மீனவர்கள் மறுத்து அப் படகினை கிருஷ்ணாம்பட்டினத்தில் உள்ள தனியார் துறைமுகத்தில் கொண்டு சென்று நிறுத்தினர்.

இதையடுத்து தரங்கம்பாடி மீனவ கிராம பஞ்சாயத்தார் தமிழக அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து, கடந்த திங்கள்கிழமை மீண்டும் ஆந்திரா சென்று மாவட்ட ஆட்சியரின் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி செவ்வாய்க்கிழமை அந்த படகினை தரங்கம்பாடி துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர். ஆனால் படகில் வைத்திருந்த வலைகள், பேட்டரி, டீசல் உள்ளிட்ட ரூ.20 லட்சம் மதிப்பிலான அனைத்து பொருட்களையும் ஆந்திர மீனவர்கள் எடுத்துக் கொண்டதாக குற்றம்சாட்டியுள்ள தரங்கம்பாடி மீனவர்கள் தமிழக அரசு இப்பிரச்னையை மனிதாபிமானத்தோடு அணுகி, பாதிக்கப்பட்ட மீனவருக்கு இழப்பீட்டு தொகையை பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

25 − 20 =