விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டத்தில் கோரிக்கை வைத்திருந்த நிலையில் ‘தமிழ்நாடு ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல ஆணையம்’ அமைக்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்புக்கு கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னத்துரை நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பா அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆதிதிராவிடர் மற்றும் பலங்குடியினர் நலத்துறையின் சார்பில் மாநில விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் கடந்த ஆகஸ்ட் 19 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கலந்துகொண்டு பேசினேன். அப்போது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் பேசும்போது, முக்கியமானதாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் உரிமைகளை சட்டப்பூர்வமாக நிலைநாட்டும் வகையில் ‘ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நல ஆணையம்’ அமைக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.
எனது கோரிக்கையை ஏற்று, மாநில அளவில் ஆதி திராவிடர்கள், பழங்குடியினர் ஆகியோருடைய சட்டபூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுடைய முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், ‘தமிழ்நாடு ஆதி திராவிடர் பழங்குடியினர் நல ஆணையம்’ என்கிற புதிய அமைப்பு உருவாக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்துள்ளார். வராற்று முக்கியத்துவம் வாய்ந்த முதல்வரின் இந்த அறிவிப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும் எனது சார்பிலும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், சமத்துவ மயானத்திற்கு ஊக்கத் தொகை அறிவித்திருப்பது, முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் என்ற அறிவிப்பு, ஆதி திராவிட நலத்துறையின்கீழ் இயங்கும் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள், அறிவுத்திறன் வகுப்பு, கணினிப் பயிற்சி உள்ளிட்ட பல சிறப்புவாய்ந்த அறிவிப்புகளை வெளியிட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் நலனில் அக்கறை செலுத்தியுள்ள முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதனோடு, தலித் ஊராட்சி மன்றத் தலைவர்களிடம் காட்டப்படும் சாதியப் பாகுபாடு, கோவில் திருவிழாக்களில் தலித் மக்கள் மீதான வன்மம், வன்கொடுமை நிகழ்த்தியவர்களிடமே கவுண்டர் பெட்டிசன் வாங்கிக்கொண்டு வழக்கை நீர்த்துப் போகச் செய்யும் காவல்துறையின் பாரபட்சம், புகார் தெரிவித்து 60 நாட்களுக்குள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை, கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீட்டை 21 சதமாக உயர்த்துவது, வன உரிமை சட்டத்தின் கீழ் பழங்குடியின மக்களுக்கு உரிமைகள் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளையும் மாநில முதலமைச்சர் நிறைவேற்றித்தர வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு எம்.சின்னத்துரை எம்எல்ஏ., தெரிவித்துள்ளார்.