ஆதனக்கோட்டை வீரடி விநாயகருக்கு வருஷாபிஷேகம் மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே உள்ள குப்பையன்பட்டி கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ வீரடி விநாயகர் ஆலயத்தில் திருக்குடமுழுக்கின் ஓராண்டு நிறைவையொட்டி வருஷாபிஷேகமும் விநாயகர் சதுர்த்தி விழாவும்  வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சேலம் மேச்சேரியில் அமைந்துள்ள தமிழின குருபீட அரசயோகி கருவூறார் சத்தியபாமா அறக்கட்டளை குழுவினர் வீரடி விநாயகர் திருக்கோயிலில் தமிழ்வேத ஆகம முறைப்படி பிள்ளையார் சதுர்த்தி விழா வேள்வி நடத்தி அருள் வழங்கி வாழ்த்தினார்கள். இதில் முதல் நிலை வேள்வியில் கோயில் கிராம பூஜை கிராம தெய்வங்கள் குலதெய்வங்கள் அழைப்பு விநாயகர் பிள்ளையார் கணபதி முக்கூட்டு நிலையான் வேள்வி அருள் கலயம் உயிர்ப்பு பூசை தமிழ் வேத ஆகம முறைப்படி நடைபெற்றது.

இரண்டாம் கால பூசை ஓமம் கருவறை உயிர்ப்பு மந்திரம் ஓதி ஆதிசிவனார் அருளிய அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் வேத ஆகம முறைப்படி தமிழ்வேத மொழியில் மட்டுமே நிகழ்ந்த கருவறை உயிர்ப்பு மந்திரம் காயத்ரி மந்திரம் ஆகிய மந்திரம் ஓதி நல்லருள் கருவறையில் உயிர்ப்பு வழங்கப்பட்டது. பின்னர் படையலிட்டு கற்பூர ஜோதி வழிபாடு நவகோள் வழிபாடு கருவறை நிறைவு பூசை அருளாளர்கள் முன்னிலையில் சிறப்பாக நிகழ்ந்தது.  புதுக்கோட்டை தாமோதரன் குழுவினர் திருவாசகம் தேவாரம் திருவருட்பா போன்ற பல்வேறு தெய்வத்தமிழால் பாடப்பெற்ற சைவ நெறி திருமுறை திருப்பாடல்களை பாடினர்.  இந்த நிகழ்ச்சியில் ஆதனக்கோட்டை சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.