ஆட்டோ வெடி விபத்து தீவிரவாத செயல்: கர்நாடக டி.ஜி.பி., பகீர்!

கர்நாடக மாநிலம் மங்களூருவில் நேற்று மாலை ஆட்டோ ஒன்றில் நடந்த வெடிவிபத்து தற்செயலானது அல்ல அது தீவிரவாதச் செயல் என்று கர்நாடக டி.ஜி.பி., பிரவீன் சூட் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நகர் நாகுரி பகுதியில் நேற்று மாலை ஆட்டோ சென்று கொண்டிருந்தது. திடீரென்று அந்த ஆட்டோ ‘டமார்’ என்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் ஆட்டோவில் மளமளவென தீப்பிடித்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து ஆட்டோவில் எரிந்த தீயை அணைத்தனர். இதில், ஆட்டோ டிரைவரும், ஒரு பயணியும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் 2 பேரையும் மீட்டு மங்களூரு வென்லாக் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி தகவலறிந்ததும் மூத்த போலீஸ் அதிகாரிகளும், தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். ஆட்டோ வெடித்தது எப்படி? என்பது பற்றி ஆய்வு செய்தனர். அப்போது ஆட்டோவில் இருந்து குக்கர் கண்டெடுக்கப்பட்டது. குக்கரில் வெடிபொருள் வைக்கப்பட்டிருந்த அடையாளங்கள் இருந்தன. குக்கரை வெடிகுண்டாக செய்து வெடிக்க செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தியதில் வெடிகுண்டு தயாரிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய வயர்கள், பேட்டரிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஆட்டோவில் பயணித்த பயணி தன் அடையாளங்களை மறைத்துள்ளார். தன் பெயர் பிரேம் ராஜ் என்று கூறினாலும் அடையாள அட்டையில் வேறு பெயராக உள்ளது. அவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரது பின்னணி என்ன? என்பது தெரியவில்லை. அவர் அருகிலுள்ள மங்களூரு ரெயில் நிலையத்துக்கு செல்வதற்காக ஆட்டோவில் சவாரி செய்துள்ளார். அப்போதுதான் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. குக்கரில் வெடிகுண்டு வைத்து அவர் ரெயில் நிலையத்துக்குச் செல்ல என்ன காரணம்? அவரது உண்மையான பெயர் என்ன? எந்த ஊரை சேர்ந்தவர்? ரெயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு நடத்தி நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டாரா? என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் நடைபெற்ற இடத்தின் அருகே கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் கட்டிடத்தின் அருகிலுள்ள கண்காணிப்பு கேமராவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்துச் சிதறிய காட்சிகள் பதிவாகியுள்ளது.

இது குறித்து கர்நாடகா டி.ஜி.பி., பிரவீன் சூட் தனது ட்விட்டர் பக்கத்தில், “உறுதியாகிவிட்டது. நடந்தது விபத்து அல்ல. அது தீவிரவாத செயல். பலத்த சேதம் விளைவிக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டுள்ளது. கர்நாடக போலீஸார் மத்திய அமைப்புகளுடன் இணைந்து விசாரித்து வருகின்றனர். இந்த தாக்குதலில் காயமடைந்தவர் பேசும் சூழலில் இல்லை. இதுவரை நடந்த விசாரணையில் இது தீவிரவாத தாக்குதல் என்பது உறுதியாகியுள்ளது. உறுதியான தகவல்கள் இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் கிடைக்கும்,” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 + = 17