ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்கவேண்டும்: மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி.

வருகிற செப்டம்பர் 1ந்தேதி (புதன்கிழமை) முதல் 9,10,11,12ஆம் வகுப்புகளுக்கு சுழற்சி முறையில் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் செயல்படும் என அரசால் அறிவிக்கப்பட்டுள்ளதையொட்டி பள்ளிகள் திறப்பதற்காக மெட்ரிக்பள்ளிகளுக்கான முன்னேற்பாடு கூட்டம் புதுக்கோட்டை பிரகதம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள தேர்வுக்கூட அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது: வருகிற செப்டம்பர் 1ந்தேதி 9,10,11,12 வகுப்புகளுக்கு சுழற்சி முறையில் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதனையொட்டி பள்ளி வளாகம், வகுப்பறைகள்,கழிப்பறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படவேண்டும்.குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்பட்டிருக்கவேண்டும். மாணவர்களும், ஆசிரியர்களும், சமூக இடைவெளியுடன் கட்டாயம் முகக்கவசம் சரியான முறையில் அணிந்து வருவதை உறுதி செய்யவேண்டும். பள்ளிகளில் உடல் வெப்ப பரிசோதனை கருவி,ஆக்ஸிமீட்டர், சானிடைசர், சோப்பு நீர் ஆகியவை போதிய இருப்பு வைத்திருக்கவேண்டும்.9,10,11,12ஆகிய வகுப்பு மாணவர்களை தவிர வேற எந்த வகுப்பு மாணவரையும் பள்ளிக்கு வரவழைக்கக்கூடாது.மீறி வேற வகுப்பு மாணவர்கள் வந்திருப்பது கண்டறியப்பட்டால் துறை ரீதியான நடவடிக்கை பள்ளிகளில் எடுக்கப்படும். ஒரு வகுப்பறையில் அதிகபட்சமாக 25 மிகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். ஆசிரியர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்கவேண்டும்.27-08-2021 (வெள்ளிக்கிழமை) பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் புதுக்கோட்டை பிரகதம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி, திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமிற்கு கொரோனா தடுப்பூசி இது வரை செலுத்திக்கொள்ளாத மெட்ரிக் பள்ளிகளின் ஆசிரியர்களையும், மாணவர்களின் பெற்றோர்களையும் அனுப்பி வைத்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏற்பாடு செய்யவேண்டும். குறிப்பாக மேற்கண்ட முகாமிலோ அல்லது மாவட்ட ஆட்சித்தலைவரின் சிறப்பான வழிகாட்டுதலோடு சுகாதார துறையின் சார்பில் ஒவ்வொரு நாளும் அறிவிக்கப்படும் முகாமிற்கோ ஆசிரியர்களை பங்கேற்க செய்து கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்துமாறு மெட்ரிக்பள்ளி முதல்வர்களை கேட்டுக்கொள்கிறேன்.அரசின் அனைத்து நிலையான கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளையும் அனைத்து பள்ளிகளும் கட்டாயம் பின்பற்றி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்.அரசு நிர்ணயித்த கட்டணத்தை தவிர கூடுதல் கட்டணத்தினை மெட்ரிக் பள்ளிகள் வசூலிக்கூடாது. அரசின் தொடர் அங்கீகாரம் மற்றும் புதுப்பித்தலை இதுவரை பெற்றிராத பள்ளிகள் உடனடியாக கோப்புகளை அனுப்பி பெற்றுக்கொள்ளவேண்டும். வருகிற செப்டம்பர் 1ந்தேதி 9,10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு பள்ளி திறப்பதற்கான சிறப்பான திட்டமிடலுடன் அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து மாணவர்களின் கற்றல், கற்பித்தல் பணியினை சிறப்பாக மேற்கொள்ள வாழ்த்துகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலர் கே.எஸ்.ராஜேந்திரன், அறந்தாங்கி மாவட்டக்கல்வி அலுவலர் கு.திராவிடச்செல்வம், இலுப்பூர் மாவட்டக்கல்விஅலுவலர் ப.சண்முகநாதன், முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் மேல்நிலை ஜீவானந்தம், உயர்நிலை கபிலன், பள்ளித்துணை ஆய்வாளர்கள் வேலுச்சாமி, குரு .மாரிமுத்து, செல்வம் மற்றும் மெட்ரிக்பள்ளிகளின் முதல்வர்கள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 7 = 16