ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதி மும்பை தாராவி: மறுசீரமைப்புக்காக ரூ.5,069 கோடிக்கு அதானி குழுமம் டெண்டர் எடுத்தது

மும்பை தாராவி குடிசைப்பகுதியை சீரமைக்க அதானி குழுமம் ரூ.5,069 கோடிக்கு டெண்டர் எடுத்துள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக மும்பை தாராவி விளங்குகிறது. தமிழர்கள், முஸ்லிம்கள் அதிகளவில் வசிக்கும் இந்த குடிசைப்பகுதியில் உள்ள வீடுகள் புறாக்கூண்டுகளை போல சிறிது, சிறிதாக இருக்கும். குடிசை வீடுகள் என்றாலும் மாடிகள் இருக்கும். ஒரு வீட்டில் பல அறைகளை உருவாக்கி மக்கள் வசிக்கின்றனர்.

மும்பைக்கு பிழைப்பு தேடி வருபவர்களுக்கு தாராவி தான் சொர்க்கப்பூமி என்று சொல்லலாம். இந்தநிலையில், அடுக்குமாடிகளை உருவாக்கும் தாராவி சீரமைப்பு திட்டம் கடந்த 30 ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது. கடந்த பாரதிய ஜனதா ஆட்சியில் தாராவி சீரமைப்பு திட்டம் தொடங்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால், கடைசி நேரத்தில் துபாய் நிறுவனத்துக்கு வழங்கிய சீரமைப்பு திட்டப்பணிக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டது.

அதன்பிறகு, தாராவி சீரமைப்பு திட்டப்பணிகள் முடங்கியது. பின்னர் ஆட்சிக்கு வந்த உத்தவ் தாக்கரே அரசு, தாராவி சீரமைப்பு திட்டத்துக்காக ரெயில்வே நிர்வாகம் நிலத்தை வழங்காமல் இழுத்தடிப்பதாக குற்றம்சாட்டியது. கடந்த ஜூன் மாதம் ஏக்நாத் ஷிண்டே – பாரதிய ஜனதா கூட்டணி அரசு பதவி ஏற்றது. அடுத்த சில நாட்களில் தாராவி சீரமைப்பு திட்டத்துக்கு ரெயில்வே நிலத்தை ஒப்படைத்தது.

இந்நிலையில், ரூ.20 ஆயிரம் கோடியில் தாராவி மறுசீரமைப்பு திட்டத்தை நிறைவேற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதன் ஒருபகுதியாக சீரமைப்பு திட்டத்திற்கான டெண்டர் திறக்கப்பட்டது. இதில் ரூ.5 ஆயிரத்து, 69 கோடிக்கு அதானி குழுமம் டெண்டர் எடுத்துள்ளது. இதன் மூலம் தாராவி சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தாராவி அடுக்குமாடிகளாக எழப்போகிறது. இருப்பினும் சீரமைப்பு திட்டத்துக்கு தாராவி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளதாவது: இங்குள்ள ஏராளமான சிறுதொழில்கள் அழிய வாய்ப்புள்ளது. தற்போது ஒரு வீட்டில் நான்கைந்து குடும்பங்கள் வசிக்கிறோம்.  அனைவருக்கும் சீரமைப்புத் திட்டத்தில் வீடு கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை வசிப்பவர்கள் அனைவருக்கும் வீடு கிடைக்காவிட்டால் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்லும் அவல நிலை ஏற்படும். தாராவி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் இடம் என்பதால், இது சர்வதேச அடையாளத்தை இழக்கும். மறுசீரமைப்பு பணிகள் தாராவியின் அடையாளத்தை அழித்துவிடும். இவ்வாறு தாராவி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

50 + = 59