பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் 8 நாட்களாக என்னென்ன பேசினோம் என்பதை வெளியில் சொல்ல முடியாது.
2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல்தான் நமக்கு முக்கியமான தேர்தல். எனவே இந்த விசயத்தில் இன்று மாலைக்குள் நல்ல முடிவு வரும் என்று நம்புகிறேன். ஈரோடு கிழக்கு தொகுதியில் நாங்கள் போட்டியிடவில்லை. எங்கள் கூட்டணி கட்சியான அ.தி.மு.க. போட்டியிட வேண்டும். அதுவும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதற்காகவே முயற்சித்து வருகிறோம். கடந்த 8 நாட்களாக பல முறை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரோடு பேசி வருகிறேன்.

கடந்த 31-ந்தேதி வரை காத்திருந்த எடப்பாடி பழனிசாமி அதன்பிறகு வேட்பாளரை அறிவித்தார். அவர் அறிவித்துவிட்டார். எனவே நாங்களும் அறிவிக்கிறோம் என்று ஓ.பன்னீர் செல்வமும் அறிவித்துவிட்டார். பா.ஜனதாவை பொறுத்த வரை உள்கட்சி விவகாரங்களில் ஒருபோதும் தலையிடாது. ஒரு வேட்பாளர். வலுவான வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும். அவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும். அதுதான் பலம் என்பதைத் தான் இருவரிடமும் எடுத்து சொன்னோம். ஓ.பன்னீர் செல்வத்திடம் ஒரு வேண்டுகோளையும் வைத்தோம். கட்சி நலனுக்காக இணைந்து செயல்படுவதே நல்லது. தென்னரசுவும் மக்கள் பிரதிநிதியாக செயல்பட்டவர். அவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்றோம். ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் சில நிபந்தனைகளை சொன்னார்கள். முடிவெடுக்க கொஞ்சம் கால அவகாசமும் கேட்டுக் கொண்டார்.
வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளன. ஓ.பன்னீர் செல்வம் தங்கள் வேட்பாளரை வாபஸ் பெற வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள். சுயேட்சை வேட்பாளரை பா.ஜனதா ஒரு போதும் ஆதரிக்காது. ஒரு வேட்பாளர். அதுவும் இரட்டை இலை சின்னத்தில் அவர் போட்டியிட வேண்டும். அவருக்கு எங்கள் முழு ஆதரவும் உண்டு. அவரது வெற்றிக்காக பாடுபடுவோம் என்பதை ஏற்கனவே இருவரிடமும் தெரிவித்துவிட்டோம். கடந்த 8 நாட்களாக என்னென்ன பேசினோம் என்பதை வெளியில் சொல்ல முடியாது. ஆனால் தலைவர்களுக்கு தெரியும். 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல்தான் நமக்கு முக்கியமான தேர்தல். எனவே இந்த விசயத்தில் இன்று மாலைக்குள் நல்ல முடிவு வரும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.