அவ்வை நடராசனுக்கு போலீஸ் மரியாதையுடன் இறுதி அஞ்சலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

தமிழ் அறிஞர், சிந்தனையாளர் என பன்முக திறமை கொண்டவர் அவ்வை நடராஜன். இவர் உடல்நல குறைவால் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 86.

இவர் பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை பட்டமும், 1958-ல் ஆராய்ச்சி பட்டமும், 1974-ல் முனைவர் பட்டமும் பெற்ற அவ்வை நடராஜன், தஞ்சையில் உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரியிலும், மதுரை தியாகராஜர் கல்லூரியிலும் தமிழ் விரிவுரையாளராக பணியாற்றினார். பின்னர், டெல்லி அகில இந்திய வானொலி நிலையத்தில் செய்தி வாசிப்பாளராகவும், அறிவிப்பாளராகவும் இருந்தார்.

இவருடைய தமிழ் புலமையால் ஈர்க்கப்பட்ட அப்போதைய முதல்வர் கருணாநிதி, இவரை தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையில் துணை இயக்குனராகவும், தலைமை செயலகத்தில் மொழி பெயர்ப்புத்துறை இயக்குனராகவும் பணியமர்த்தினார். 1984ம் ஆண்டு முதல் 1992ம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை அரசு செயலாளராக பணியாற்றினார். ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இல்லாமல், அரசு துறை செயலாளராக நியமிக்கப்பட்டவர் இவர் ஒருவர்தான்.

பின்னர், 1992ம் ஆண்டு முதல் 1995ம் ஆண்டு வரை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தார். அவ்வை நடராஜனை கவுரவிக்கும் வகையில், மத்திய அரசு ‘பத்மஸ்ரீ’ விருதையும், தமிழக அரசு ‘கலைமாமணி’ விருதையும் வழங்கியிருக்கிறது. அவ்வை நடராஜன் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மரணம் அடைந்தார்.

சென்னை அண்ணாநகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை 3 மணிக்கு அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் உடல்நலக் குறைவால் காலமான தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடலுக்கு நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து மறைந்த தமிழறிஞர் அவ்வை நடராஜனின் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

22 − = 15