தவறான அறுவைச் சிகிச்சையால் பெண்ணனின் உயிரிழப்புக்கு காரணமான மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என மாதர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி புதுக்கோட்டையில் திங்கள்கிழமை அளித்த பேட்டி: கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த முத்துக்குமார் மனைவி ராணி வயது 28. ராணி புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சியில் பிறந்தவர்.
இவர்களுக்கு ஏற்கனவே ஒரு மகள் பிறந்து இரணடாவதாக ஆண்குழந்தை பிறந்ததால் கடந்த 2018-ல் ராணிக்கு குடும்பக்கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
இந்நிலையில், கைக்குறிச்சியில் பெற்றோர் வீட்டில் தங்கி இருந்த ராணிக்கு வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து பரிசோதித்தில் ராணி கருவுற்று இருப்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த 18-ஆம் தேதி புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அறுவைச் சிகிச்சை மூலம் சிசுவை அகற்ற வேண்டும் மருத்துவர்கள் முடிவெடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த ஆக.23 அன்று ராணிக்கு அறுவைச் சிகிச்சை செய்தபோது, எதிர்பாராத விதமாக ராணி உயிரிழந்தார். ராணியின் உடலைநிலையை முழுமையாகப் பரிசோதிக்காமல் ஆறுவை சிகிச்சை செய்துள்ளதாலேயே உயிரிழப்பு எற்பட்டுள்ளது.
ராணி கருவுற்று இருப்பது வெளியில் தெரிய வந்தால் குடும்பக்கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு சிக்கல் வரும் என்பதால் அவசரகோலத்தில் இந்த அறுவைச் சிகிச்சை செய்துள்ளதாக ராணியின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
நடந்துள்ள சம்பவம் குறித்து காவல்துறையினர் முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும். மருத்துவரீதியாக தவறு நடந்திருந்தால் அவர்கள் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரண்டு பச்சிளம் குழந்தைகளை வைத்துக்கொண்டு சிரமப்படும் ராணியின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும்.
அவரது குடும்பத்தி ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
புதிய அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதே நேரத்தில், குடும்பக்கட்டுப்பாடு செய்துகொண்ட பெண்களில் சிலர் மீண்டும் கருவுருதல் என்பது ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.
நவீன மருத்துவ உலகில் இதுபோன்ற தவறுகளை சரிசெய்யாமல் இருப்பது முறையல்ல.
கடந்த ஆட்சியில் பல்வேறு அரசு சுகாதார நிலையங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் மூடப்பட்டது. அவற்றை மீண்டும் புனரமைத்து கிராமப்புற மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு சுகந்தி தனது பேட்டியில் குறிப்பிட்டார். பேட்டியின் போது சங்கத்தின் மாவட்டத் தலைவர் சுசீலா, செயலாளர் சலோமி, பொருளாளர் பாண்டிச்செல்வி மற்றும் இறந்த ராணியின் உறவினர்கள் உடனிருந்தனர்.