அறந்தாங்கி வட்டார மானாவாரி சாகுபடி விவசாயிகளுக்கு கண்டுணர்வு பயணம்

அறந்தாங்கி வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) 2021-22ம் ஆண்டு மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை திட்டத்தின் கீழ் மானாவாரி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானாவாரி சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றிய விவசாயிகள் கண்டுணர்வு பயணம் வம்பன் வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு செல்லப்பட்டது.

இப்பயிற்சிக்கு அறந்தாங்கி வட்டார வேளாண்மை அலுவலர் ஜெயவேலன் தலைமை வகித்து இப்பயணத்தை துவக்கி வைத்தார். பிறகு வம்பன் வேளாண்மை அறிவியல் நிலைய உதவி பேராசியர் செரின் ராஜம்மாள் கூறுகையில், மானாவாரி சாகுபடி பயிர்களான பயறுவகைப்பயிர்கள், சிறுதானியப்பயிர்கள், எண்ணெய்வித்துபயிர்கள் பராமரிப்புகள் குறித்தும், நேரடி நெல் விதைப்பு தொழில்நுட்பங்கள் குறித்தும், மண்ணில் ஈரப்பதத்தை அளவீடு கருவிகள் மற்றும் நெல்லில் இலைவண்ண அட்டையை பயன்படுத்தி உரமிடுவது குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்.

பின்பு வேளாண்மை அறிவியல் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் மானாவாரி சாகுபடி தொழில்நுட்பங்கள் உள்ளடக்கிய பயிர்கள் விவசாயிகளுக்கு காண்பிக்கப்பட்டு அசோலா வளர்ப்பு, மண்புழு உரம் தயாரித்தல், கம்போஸ்ட் உரம் தயாரித்தல், பண்ணைக்குட்டையின் பயன்பாடுகள் குறித்தும் விவசாயிகளுக்கு செயல்விளக்கமுறையில் விளக்கமளிக்கப்பட்டது.

முன்னதாக சி.ரவிராஜன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் வரவேற்று நன்றி கூறினார். இப்பயணத்தில் அட்மா திட்ட அலுவலர் ராஜூ மற்றும் பயிர் அறுவடை பரிசோதனை அலுவலர் ஸ்ரீராம் அழைத்துசென்று வந்தனர்.