புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா சுப்பிரமணியபுரம், கூகனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்தனர். இந்நிலையில் மூன்று நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக 100 ஏக்கருக்கு மேல் நெற்கதிர்கள் முழுமையாக தண்ணீரில் மூழ்கி அழுகியதால் அரசு அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்கினால் மட்டுமே விவசாயத்தை தொடர முடியும் எனக் கண்ணீருடன் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சுப்பிரமணியபுரம் கூகனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சம்பாசாகுபடி செய்யப்பட்டது, இந்நிலையில் பருவ மழை சரியாக பெய்யாததால் தனி நபரிடம் விவசாயிகள் காசு கொடுத்து தண்ணீரை விலைக்கு வாங்கி விவசாயம் செய்து வந்தனர். சுப்பிரமணியபுரம்,
கூகனுர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வயல்களில் விளைச்சல் கண்டுள்ள நெற்கதிரை விவசாயிகள் அறுவடை செய்ய தயாராக இருந்தர், தற்போது மூன்று நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக வயலில் மழைநீர் தேங்கி அழுகிய நிலையில் நெற்கதிர்கள் சாய்ந்து கிடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதனால் பெரும் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வயல்களை வேளாண்மை துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கண்ணீருடன் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்