அறந்தாங்கி அருகே சீனமங்கலம் அடைக்கலம் காத்த அய்யனார் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்- எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் பங்கேற்பு

அறந்தாங்கி அருகே சீனமங்கலம் கிராமத்தில் அடைக்கலம் காத்த அய்யனார் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சீனமங்கலம் கிராமத்தில் அடைக்கலம் காத்த அய்யனார்,காளியம்மன் திருக்கோயில்கள் அமைந்துள்ளது. இக்கோயில்கள் கும்பாபிஷேகம் செய்வதென அப்பகுதி கிராமத்தார்களால் முடிவு செய்யப்பட்டு கோயில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று முடிந்தன. இதற்கென சிறப்பான யாகசாலை அமைத்து முதற்கால யாக பூஜை சனிக்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நாளான இன்று இரண்டாம் காலயாக பூஜை நிறைவுற்று கடம் புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது. கடம் புறப்பாடானது மேளதாளங்களுடன் கோவிலை சுற்றி வலம்வந்தபின் கோபுர கலசத்தை அடைந்தது. சந்திரசேகரா சர்மா சுவாமி தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகவிழாவில் அறந்தாங்கி காங்கிரஸ்  சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், இடையங்கோட்டை நிலக்கிழார் சோமசுந்தரம், மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பாலசுந்தரம் , இடையன்காடு தொழிலதிபர் திருஞானம், இடையங்கோட்டை சேனாதிபதி  மற்றும் சீனமங்கலம், நாகுடி சுற்றுவட்டார ஆன்மீக மெய்யன்பர்கள் பொதுமக்கள்  ஏராளமானோர் கோபுர தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.