அரியலூர் மாவட்ட தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் ரூ.8.60 லட்சம் கொரோனா நிவாரண நிதி வழங்கல்

அரியலூர் மாவட்ட தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில், அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரிடம், ரூ 8.60 லட்சம் கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டது.

தமிழக ஆசிரியர் கூட்டணியின் அரியலூர் மாவட்ட கிளை சார்பில், அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி அறிவியல் அரங்க வளாகத்தில் நடைபெற்ற, கொரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் மாவட்ட தலைவர் மா.நம்பிராஜ் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோ.பாலசுப்பிரமணியன் வரவேற்று பேசினார். அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக ஆசிரியர் கூட்டணியின் அரியலூர் மாவட்ட கிளை சார்பில்,  8 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை, தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரிடம், ஐபெக்டோ அமைப்பின் அகில இந்திய பொதுச் செயலாளர் வ.அண்ணாமலை வழங்கி பேசினார்.

இந்நிகழ்ச்சியில், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் சுந்தரமூர்த்தி, அரியலூர் கல்வி மாவட்ட செயலாளர் ஓ.கருணாநிதி மற்றும் தா.பழூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், திருமானூர் பகுதி பொறுப்பாளர்கள், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.