அரியலூர் மாவட்டம், திருமழபாடி சிவாலயத்தில் நடைபெற்ற நந்தியம்பெருமான்- சுயசாம்பிகா தேவி திருமண உற்சவத்தில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட திருமழபாடியில், சுந்தராம்பிகை உடனமர் வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது. திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் தேவாரம் பாடல் பெற்றதும், வசிஷ்டர், அகஸ்தியர் ஆகியோரால் பூஜிக்கப் பெற்றதுமான இந்த கோயிலில், சிவபெருமானுக்கு காவலனாகவும், தோழனாகவும் விளங்கும் நந்தியம்பெருமானுக்கு, வேறெங்கும் காண முடியாத வகையில் திருமணம் நடைபெற்றதாக ஐதீகம். ஆண்டுதோறும் பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தன்று நந்தியம் பெருமான் சுயசாம்பிகா தேவி திருமண உற்சவம் பக்தி சரத்தையுடன் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோவில் வளாகத்தில், வியாக்ர பரத முனிவரின் புதல்வி சுயசாம்பிகை தேவியருக்கும், சிலாதல முனிவரின் புதல்வர் நந்தியெம் பெருமானுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
திருமண நிகழ்ச்சியையொட்டி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருமண மேடையில் சுயசாம்பிகை தேவியருக்கும், நந்தியெம்பெருமானுக்கும் மஞ்சள், சந்தனம், விபூதி, மாவுப்பொடி, திரவியப்பொடி, தேன், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர், பழச்சாறு, தயிர், பால் போன்ற பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தி அலங்காரம் செய்யப்பட்டது.
சிவாச்சாரியார்கள் யாக வேள்வியுடன், வேத மந்திரங்கள் முழங்க, நாதஸ்வர மங்கல இசையுடன், அங்கு கண்ணாடி பல்லக்கில் வீற்றிருந்த, சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாதசுவாமி மற்றும் திருவையாறு அறம் வளர்த்த நாயகி உடனாய அய்யாரப்பர் முன்னிலையில், நந்தியெம் பெருமான்- சுயசாம்பிகை தேவி திருமண உற்சவம் நிறைவேறியது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த திருமண உற்சவத்தை தரிசித்தனர். அதை தொடர்ந்து, மணமக்களுக்கு சிறப்பு தீபாராதனை நடைப்பெற்றது. ஊஞ்சலில் அமர்ந்து மணமக்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் நந்தியெம்பெருமானும், சுயசாம்பிகை தேவியாரும் திருமணக் கோலத்தில் திருமழபாடியின் நான்கு ராஜ வீதிகளிலும் வீதி உலா எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். திருமழபாடியில் வசிக்கும் ஒவ்வொருவரும், தமது வீட்டில் நடைபெறும் திருமண விழாவாக நினைத்து, வாசலில் பந்தல் மாவிலை தோரணங்கள் கட்டி சிறப்பு செய்திருந்தனர். அதைத் தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் கண்கொள்ளா வானவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டது.
திருமழபாடி சிவாலயத்தில் நடைபெற்ற நந்தியம்பெருமான் திருமண உற்சவத்தை முன்னிட்டு, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை, அரியலூர் மாவட்ட நிர்வாகம், காவல்துறை, பல்வேறு துறையினரும் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.