அரியலூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 278 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சியர் அவர்களால் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் 4ஆம் ஆண்டு நிறைவு விழாவினையொட்டி, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அறுவை சிகிச்சை பெற்ற 6 பயனாளிகளுக்கு பரிசுகளையும், புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்ட 5 உறுப்பினர்களுக்கு காப்பீட்டுத் திட்ட அட்டைகளையும், சிறப்பாக செயல்பட்ட மருத்துவமனை, வார்டு மேலாளர்கள் மற்றும் காப்பீட்டுத் திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைத்தல் பணியில் அரியலூர் மாவட்டத்திலுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் சிறப்பாக செயல்பட்டதன் அடிப்படையில், மாநில அளவில் அரியலூர் மாவட்டம் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. அதன் அடிப்படையில், அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியினை 100 சதவீதம் நிறைவு செய்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களான கிராம நிர்வாக அலுவலர், சத்துணவு அமைப்பாளர்கள், கிராம உதவியாளர்கள் 6 நபர்களுக்கு பணியினை பாராட்டி பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, மாவட்ட ஊரக வளர்ச்சித்துறைத் திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.முத்துகிருஷ்ணன், வட்டாட்சியர் கண்ணன், தலைமை மருத்துவர் மரு.சிவபிரகாசம் உஷா, மாவட்ட திட்ட அலுவலர் த.பாஸ்கரன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 33 = 35