அரியலூர் மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் பட்டு சேலை விற்பனை துவக்க விழா மற்றும் கர்ப்பிணிகளுக்கு 100% கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்த, சுகாதாரத்துறையினருக்கு பாராட்டு விழா உள்ளிட்டவை, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழு மூலம் உற்பத்தி செய்யப்படும் சுத்த பட்டு புடவைகள், நூல் புடவைகள் உள்ளிட்டவற்றை ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதற்கான துவக்கவிழா, மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில், தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் ஆன்லைன் விற்பனையைத் தொடங்கி வைத்தார்.
அதை தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு நூறு சதவிகிதம் கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை புரிந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை துணை இயக்குனர் கீதாராணி மற்றும் சுகாதாரத் துறை டாக்டர்கள், செவிலியர்கள், உள்ளிட்டோருக்கு பாராட்டுச் சான்றிதழை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் வழங்கி பேசினார்.
அரியலூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயினுலாபுதீன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் சுந்தர்ராஜன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பூங்கோதை மற்றும் அரசு அலுவலர்கள், சுகாதார துறையினர், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.