அரியலூர் பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது
அரியலூர் நகரின் மையப் பகுதியில், ஸ்ரீ அலமேலு மங்கை சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் உள்ளது. இதே கோயில் உள் பிரகாரத்தில் கோதண்ட ராமசாமி விக்கிரகமும் உள்ளன.
பிரசன்ன வெங்கடாஜலபதியை மூலவராக கொண்ட இக்கோயில், கோதண்டராமசாமி திருக்கோயில் என, இந்து சமய அறநிலைத்துறை நிர்வாக ஏடுகளில் உள்ளன.
பல நூறு ஆண்டுகள் பாரம்பரியம் மிகுந்த இக்கோயிலில், ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி உற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி 2-ம்தேதி நேற்று அதிகாலை, பிரசன்ன வெங்கடாஜலபதி சிறப்பு அலங்காரத்தில், பரமபத வாசல் வழியாக எழுந்து ஆழ்வார்களுக்கு மோட்சம் அளித்தார்.
இந்நிகழ்ச்சியை கோயில் வளாகத்தில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து பெருமாள் திருவீதி உலா உற்சவம் நடைபெற்றது.
இதே போல, அரியலூர் மாவட்டத்தில் கங்கைகொண்ட சோழபுரம் அருகே, குருவாலப்பர் கோயில் கிராமத்தில் உள்ள, வீரநாராயண பெருமாள் கோயில், உடையார்பாளையம் பெருமாள் கோயில் உள்பட, மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு வைணவ கோயில்களிலும், சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. ஆங்காங்கு திரண்டு இருந்த பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்தனர்.