அரியலூரில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பால் குளிரூட்டும் நிலையம் அமைக்க வலியுறுத்தி கலெக்டரிடம் மனு

அரியலூர் மாவட்டத்தில், ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, பால் குளிரூட்டும் நிலையம் அமைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம், கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு பணியாளர்கள் சங்க பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் கொளஞ்சிநாதன் தலைமையில், அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதியிடம், நேரில் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:- அரியலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட, பால்வளத் துறை துணைப் பதிவாளர் கட்டுப்பாட்டில், 97 பிரதம பால் உற்பத்தியாளர் சங்கங்கள் இயங்கி வருகின்றன. இந்த சங்கங்களின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 45 ஆயிரத்து 564.

மேற்கண்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம், நாளொன்றுக்கு சுமார் ஒரு லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. உள்ளூர் விற்பனை போக மீதமுள்ள பால், பெரம்பலூர் பால் குளிரூட்டும் மையத்திற்கு, நாள்தோறும் ஒப்பந்த வாகனம் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. வேறு மாவட்டத்துக்கு பால் கொண்டு செல்லப்படுவதால், பாதுகாப்புத் திறன் பாதிக்கப்படுகிறது.

எனவே அரியலூர் மாவட்டத்திற்கு என தனியே, ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பால் குளிரூட்டும் மையம் அமைக்க, உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, மாவட்ட கலெக்டரை கேட்டுக் கொள்வது.

அரியலூர் மாவட்ட பால் கொள்முதல் செய்வதில் கூட, ஆவின் நிர்வாகம் பாரபட்சம் காட்டுகிறது. இந்நிலை நீடித்தால் அரியலூர் மாவட்டம் பின்தங்கிய மாவட்டத்தில் ஒன்றாகும். எனவே குறைந்தபட்சம் விளாங்குடி கிராமத்திலுள்ள பால் குளிரூட்டும் மையத்தை விரிவுபடுத்தி, ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குளிர் மையமாக அமைக்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நலனை பாதுகாக்கும் வகையில், தனியாக கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின்போது அரியலூர் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு பணியாளர் சங்கங்களின் செயலாளர் இளங்கோவன், பொருளாளர் பாஸ்கர், மாவட்ட விவசாய சங்க நிர்வாகி தங்க தர்மராஐன் மற்றும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க செயலாளர்கள், பணியாளர்கள், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.