அரியலூரில் அங்கன்வாடி பணியாளர்களின் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூர் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே நடைபெற்ற, ஒன்றிய அங்கன்வாடி பணியாளர்களின் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் அரியலூர் மாவட்ட பொருளாளர் ஜோதிலட்சுமி தலைமை வகித்தார். சி ஐ டி யு நிர்வாகிகள் சிற்றம்பலம், சந்தானம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
மாநில அளவில் அங்கன்வாடி துறையில் உள்ள காலி பணியிடங்களை முழுமையாக நிரப்பி விட வேண்டும். பதிவேடு அல்லது செல்போன் இரண்டில் ஒன்றை மட்டும் உறுதிப்படுத்திட வேண்டும். 10 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள பிரதான மையங்களை மினி மையங்கள் ஆக்குவதையும், ஐந்து குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் மினி மையங்களை பிரதான மையத்தோடு இணைக்கும் திட்டத்தையும், அரசு கைவிட வேண்டும். அங்கன்வாடி பணியாளர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்குவதை தவிர்க்க வேண்டும். 10 ஆண்டுகள் பணி செய்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு, எந்த விதமான நிபந்தனையும் இன்றி உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சங்க நிர்வாகிகள் லதா, பிரபாவதி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர், செந்துறையில் நடைபெற்ற அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் துரைசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.