புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பேரூராட்சியில் நபார்டு வங்கி, சி.சி.டி மற்றும் ரோஸ் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய அரிமளம் நர்சரி உற்பத்தியாளர் நிறுவனத்தை சென்னை நபார்டு வங்கி பொது மேலாளர் பி.டி.உஷா பார்வையிட்டு ஆய்வு செய்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு நபார்டு வங்கி புதுக்கோட்டை மண்டல வளர்ச்சி அதிகாரி ஜெயஸ்ரீ தலைமை தாங்கினார். நர்சரியை பார்வையிட்டு, நிகழ்ச்சியில் பேசிய நபார்டு வங்கி பொது மேலாளர் அங்கு இருந்த நர்சரி கம்பெனியின் பங்குதாரர்களிடம் பேசுகையில், கூட்டு முயற்சியில் இந்த தொழிலை தொடங்கி உள்ளீர்கள், இந்த தொழிலை திறம்பட முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதில் பங்குதாரர்களாக உள்ள அனைவரும் தொழிலதிபர்களாக மாற வேண்டும் என்றார். மேலும் அவர் பேசுகையில் பெண்கள் ஒன்றிணைந்து செய்யப்படும் இதுபோன்ற கூட்டு முயற்சியில் அறிவியல் பூர்வமான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, விற்பனை வாய்ப்புகளை அதிகரித்து, கம்பெனியை இலாபகரமான கம்பெனியாக முன்னெடுத்து செல்ல வேண்டும் என்றும், அடுத்த வருட விற்பனை ரூ.1.00 கோடியை எட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி விவசாய திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். நபார்டு வங்கி தஞ்சாவூர் மாவட்ட வளர்ச்சி அதிகாரி அனீஷ், ரோஸ் நிறுவன இயக்குனர் ஆதப்பன், சிசிடி நிறுவன ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி, அரிமளம் நர்சரி உற்பத்தியாளர் கம்பெனியின் இயக்குநர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக அரிமளம் நர்சரி உற்பத்தியாளர் நிறுவன முதன்மை செயல் அலுவலர் வேலாயுதம் வரவேற்றார். இறுதியில் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் ராஜேஸ்வரி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட பங்குதாரர்கள் கலந்து கொண்டனர். மேலும், புதுக்கோட்டை இயற்கை விவசாய உற்பத்தியாளர் கம்பெனியின் செயல்பாடுகளையும், நபார்டு கிராம அங்காடியின் செயல்பாடுகளையும் பார்வையிட்டார்.